வேலூர் மாவட்டத்தில் ஒரே மாதத்தில் மூன்று வெவ்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்களைத் திருடிய வாலிபர், சிசிடிவி காட்சிகள் வெளியாகியும் காவல்துறையால் பிடிபடாமல் இருப்பது பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம், காட்பாடி பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன், ஜோலார்பேட்டையில் பணிபுரிந்து வருகிறார். இவர் தினமும் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு பணிக்குச் செல்வது வழக்கம். ஆனால், ஆகஸ்ட் 5 அன்று, பணி முடிந்து திரும்பியபோது, அவரது வாகனத்தை ஒரு வாலிபர் திருடிச் சென்றது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. இதேபோல், ஆகஸ்ட் 22, அன்று, அதே ரயில் நிலையத்தில், பூட்செட் பணியாளர் காளியின் இருசக்கர வாகனமும் அதே வாலிபரால் திருடப்பட்டது.
மேலும், ஆகஸ்ட் 23 அன்று, சந்திர நகர் பகுதியைச் சேர்ந்த தேசிங்குவின் மகன் குரு ராகவேந்திரன் (43), திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் மருந்தாளுநராகப் பணிபுரிபவர், இவரது இருசக்கர வாகனமும் அதே வாலிபரால் திருடப்பட்டது.
ஒரே மாதத்தில், பொதுமக்கள் அதிகம் கூடும் மூன்று வெவ்வேறு இடங்களில் இந்த வாலிபர் திருட்டு சம்பவங்களை அரங்கேற்றியுள்ளார். சிசிடிவி காட்சிகள் கிடைத்தும், காவல்துறையினர் இதுவரை அவரைப் பிடிக்க முடியாமல் திணறுவதாகக் கூறப்படுகிறது. இதனால், காவல்துறையின் மெத்தனப் போக்கு குறித்து சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
Follow Us