சென்னை பெரம்பூரை அடுத்த ஓட்டேரி பகுதியைச் சேர்ந்தவர் பவித்ரா. இதில் இந்த பெண்ணின் வாழ்க்கை நலன் கருதி அவரது பெயர் மட்டும் மாற்றப்பட்டுள்ளது. 31 வயதான பவித்ரா, தன்னுடைய குடும்ப வறுமை காரணமாக பைக் டாக்ஸி டிரைவராக வேலை செய்து வருகிறார். இதனால் காலை முதல் இரவு பல்வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொள்ளும் பவித்ரா, அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து தனது வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருகிறார்.
இந்த நிலையில், கடந்த 11ம் தேதி மதியம் பவித்ராவுக்கு ஒரு பைக் டாக்ஸி அழைப்பு வந்திருக்கிறது. அதனை உடனடியாக செலக்ட் செய்த பவித்ரா, முன்பதிவு செய்த வாடிக்கையாளரை செல்போனில் தொடர்புகொண்டு பேசியுள்ளார். அப்போது எதிர்முனையில் பேசிய ஒரு இளைஞர், தன்னுடைய அம்மாவை கோயம்பேட்டில் இருந்து அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ. வரை அழைத்துச் செல்ல வேண்டும் எனக் கூறியிருக்கிறார். இதையடுத்து, பவித்ரா.. அந்த வாடிக்கையாளர் முன்பதிவு செய்த லோக்கேஷனுக்குச் சென்றிருக்கிறார்.
அந்த நேரத்தில், அங்கு காத்திருந்த இளைஞரிடம் உங்கள் அம்மா வரவில்லையா என கேட்டதற்கு.. நான்தான் முன்பதிவு செய்தேன். எனக்கு கல்லூரிக்கு நேரமாகிவிட்டது. அதனால் என்னை கல்லூரிக்கு பைக்கில் அழைத்துச் செல்ல முடியுமா என கேட்டிருக்கிறார். இதையடுத்து, பவித்ரா அந்த இளைஞரை பைக்கில் ஏற்றிக்கொண்டு.. அவர் சொன்ன இடத்திற்கு சென்றுள்ளார்.
இவர்கள் அரும்பாக்கம் பகுதியில் செல்லும்போது செல்போனில் பேசிக் கொண்டு வந்த இளைஞர், திடீரென பவித்ராவுக்கு பாலியல் தொல்லைகளைக் கொடுத்திருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண் டிரைவர் பவித்ரா, தன்னுடைய பைக்கை நிறுத்திவிட்டு ஏன் இப்படி நடந்து கொள்கிறாய் என அந்த இளைஞரிடம் தகராறு செய்திருக்கிறார். நடுரோட்டில் நடந்த இந்த பிரச்சனையை பொதுமக்கள் சிலர் தட்டிக் கேட்டுள்ளனர். அதைப் பார்த்ததும் அந்த இளைஞர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் டிரைவர் பவித்ரா, இதுகுறித்து அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில், போலீசார் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து.. குற்றவாளி குறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, பெண் டிரைவரிடம் அத்துமீறிய அமைந்தகரையைச் சேர்ந்த இம்ரான் என்பவரை போலீஸார் கைது செய்து அவரிடமிருந்த செல்போனையும் பறிமுதல் செய்தனர். மேலும், கைது செய்யப்பட்ட இம்ரான், ராயப்பேட்டையில் உள்ள கல்லூரியில் படித்து வருவது தெரியவந்தது. அவரிடம் மேற்கொண்ட தீவிர விசாரணைக்கு பிறகு.. இம்ரானை கைது செய்து சிறையில் அடைத்தனர்.