ஈரோடு மாவட்டம் கொடுமுடி சென்னசமுத்திரம் சாலைப்புதூர் கிழக்கு வீதியை சேர்ந்த சவுந்தர்ராஜன் மகன் சுகுமார் (35). திருமணம் ஆகாதவர். பிஇ படித்து விட்டு, கரூர் மாவட்டத்தில் டெக்ஸ்டைல் வேலை பார்த்து வந்தார். சுகுமாரின் தந்தை சவுந்தர்ராஜன் கடந்த ஜனவரி மாதம் சிறுநீரக நோயால் இறந்து விட்டார். சுகுமார் கடந்த சில தினங்களுக்கு முன் மருத்துவமனையில் உடலை பரிசோதித்துள்ளார். அப்போது, ரத்த அழுத்த நோய் உள்ளதாகவும், தற்போது ரத்த அழுத்தம் அதிகமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால், மனவேதனை அடைந்த சுகுமார், தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார். இதனை சுகுமார், அவரது உறவினர் ஒருவருக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பிய வாய்ஸ் மெசேஜில், ‘தனக்கு ரத்த அழுத்தம் இருப்பதாகவும், எனது அப்பா போல சிறுநீரக கோளாறு இருக்கும். நான் எனது அப்பா போல கஷ்டபட விரும்பவில்லை. அதனால், விஷ மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த உறவினர், தற்கொலைக்கு முயன்ற சுகுமாரை மீட்டு கரூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுகுமார் உயிரிழந்தார். இதுகுறித்து கொடுமுடி போலீசில் நேற்று சுகுமாரின் அம்மா புவனேஸ்வரி அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.