Advertisment

வீடு வீடாகக் கதவைத் தட்டிய இளைஞர்; சுற்றி வளைத்த கிராம மக்கள் - விசாரணையில் திடீர் ட்விஸ்ட்

2

தென்காசி மாவட்டத்தில் உள்ள பாட்டாகுறிச்சி கிராமத்தில், ஒரு இளைஞர் தெருத் தெருவாக வலம் வந்து, ஒவ்வொரு வீட்டின் கதவையும் தட்டியதாகக் கூறப்படுகிறது. கதவைத் தட்டும் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், கொள்ளையர்கள் ஊருக்குள் புகுந்துவிட்டார்களோ என்ற அச்சத்தில் உறைந்து போயினர்.

Advertisment

இதனைத் தொடர்ந்து, வீட்டை விட்டு வெளியே வந்த சிலர், சம்பந்தப்பட்ட இளைஞனைச் சுற்றி வளைத்துப் பிடித்தனர். பின்னர், சாம்பவர் வடகரை காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினரிடம் இளைஞனை ஒப்படைத்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பசி தாங்க முடியாமல், அந்த இளைஞர் உணவு கேட்க கதவைத் தட்டியது தெரியவந்தது. பின்னர், அவர் வைத்திருந்த செல்போனை கைப்பற்றிய காவல்துறையினர், அதில் இருந்த தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டனர்.

அப்போது, அந்த இளைஞர் திருநெல்வேலி மாவட்டம், மானூர் அருகே உள்ள அழகிய பாண்டியபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதும், மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது. மேலும், மனநிலை பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அங்கிருந்து அவர் தப்பித்து வந்தது தெரியவந்தது. அதன்பிறகு, உறவினர்களை சம்பவ இடத்திற்கு வரவழைத்த போலீசார், மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞனை அவர்களிடம் ஒப்படைத்தனர்.

பசி தாங்க முடியாமல், மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞர் ஒவ்வொரு வீட்டின் கதவையும் தட்டி உணவு கேட்ட சம்பவம், அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

police thenkasi
இதையும் படியுங்கள்
Subscribe