மத்தியப் பிரதேச மாநிலம், புர்ஹான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 35 வயதான பாக்யஸ்ரீ நாம்தேவ். இந்து பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இவரை, இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த 42 வயதான ஷேக் ரயீஸ் என்ற இளைஞர் ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளார். ஆனால், பாக்யஸ்ரீ அவரது காதலுக்கு தொடர்ந்து மறுப்பு தெரிவித்திருக்கிறார். இருப்பினும், பாக்யஸ்ரீ செல்லும் இடமெல்லாம் பின்தொடர்ந்து, தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறும், இந்து மதத்தில் இருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறுமாறும் கட்டாயப்படுத்தி வந்திருக்கிறார். இதனைப் பாக்யஸ்ரீ தொடர்ந்து தவிர்த்து வந்ததன் காரணமாக, ஷேக் ரயீஸ் கடும் கோபத்தில் இருந்திருக்கிறார்.

இந்நிலையில், ஆகஸ்ட் 1 ஆம் தேதி பாக்யஸ்ரீ வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனைத் தெரிந்துகொண்ட ஷேக் ரயீஸ், வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, இஸ்லாம் மதத்திற்கு மாறி தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு மீண்டும் வற்புறுத்தியுள்ளார். ஆனால், அப்போதும் பாக்யஸ்ரீ மறுப்பு தெரிவித்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த ஷேக் ரயீஸ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பாக்யஸ்ரீயின் கழுத்தை அறுத்துள்ளார். அத்துடன், முகம், கை உள்ளிட்ட உடலின் பல இடங்களில் குத்தி, கொடூரமாகக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த பாக்யஸ்ரீ, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து, தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், பாக்யஸ்ரீயின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், தப்பியோடிய ஷேக் ரயீஸை அடுத்த சில மணி நேரங்களில் கைது செய்தனர். 

‘கொலை செய்த ஷேக் ரயீஸ் மீது கொலை, சித்திரவதை உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும்’ மாவட்ட எஸ்.பி.  அன்தர் சிங் கணேஷ் தெரிவித்துள்ளார்.

Advertisment

இதனிடையே, பேசிய பாக்யஸ்ரீயின் சகோதரிசுபத்ரா பாய், “என் சகோதரி பாக்யஸ்ரீயின் தலைமுடியை இழுத்துச் சென்று ஷேக் ரயீஸ் அடித்து சித்திரவதை செய்திருக்கிறார். மேலும், மதம் மாறி திருமணம் செய்துகொள்ளும்படி தொடர்ந்து வற்புறுத்தினார். ஆனால், அதற்கு பாக்யஸ்ரீ ஒப்புக்கொள்ளவில்லை,” என்று கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார். மேலும், இதுகுறித்து ஏற்கனவே  பாக்யஸ்ரீ காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததாகவும், ஆனால் காவல்துறையினர் ஷேக் ரயீஸிடம் பணம் வாங்கிக்கொண்டு கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டதாகவும் பாக்யஸ்ரீயின் குடும்பத்தார் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்தச் சம்பவத்திற்கு எதிராக பஜ்ரங் தள் உள்ளிட்ட இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. மேலும், இதனை ‘லவ் ஜிஹாத்’ என்று குறிப்பிடும் இந்து அமைப்பினர், குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.