கர்நாடக மாநிலம் பெங்களூரு ஸ்ரீராம்புரம் பகுதியைச் சேர்ந்தவர் 20 வயதான யாமினி பிரியா. இவர், ஹோசகேரஹள்ளியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஃபார்ம் படித்து வந்தார். இந்த நிலையில், யாமினி பிரியாவும், ஸ்வாதந்திர பாளையாவைச் சேர்ந்த விக்னேஷ் (23) என்பவரும்  காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அதன்பின் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இருவரும் பிரிந்ததாகக் கூறப்படுகிறது.

Advertisment

இதைத் தொடர்ந்து, மாணவி யாமினி பிரியாவிடம் மீண்டும் தனது காதலை ஏற்றுக்கொள்ளும்படி விக்னேஷ் வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால், அதனை ஏற்க மனமில்லாததால், யாமினி பிரியா தொடர்ந்து மறுத்து வந்துள்ளார். இருப்பினும், தினந்தோறும் விக்னேஷ் தனது காதலை ஏற்றுக்கொள்ளுமாறு வற்புறுத்தி, தொந்தரவு செய்து வந்திருக்கிறார்.

Advertisment

இந்நிலையில், மாணவி யாமினி பிரியா தேர்வு எழுதுவதற்காக கடந்த 16 ஆம் தேதி கல்லூரிக்குச் சென்றுள்ளார். பின்னர், தனது தேர்வை எழுதி முடித்துவிட்டு, மதியம் 2:30 மணியளவில் கல்லூரியிலிருந்து வீட்டிற்குத் திரும்பியுள்ளார். மந்திரி வணிக வளாகத்திற்கு பின்புறம், ரயில்வே மேம்பாலத்தில் யாமினி நடந்து வந்துகொண்டிருந்தபோது, விக்னேஷ் அவரைப் பின்தொடர்ந்து வந்துள்ளார். திடீரென அவரை வழிமறித்த விக்னேஷ், மீண்டும் தனது காதலை ஏற்றுக்கொள்ளும்படி வற்புறுத்தியுள்ளார். ஆனால், மாணவி யாமினி பிரியா திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த இளைஞர் விக்னேஷ், கையில் வைத்திருந்த மிளகாய்ப் பொடியை யாமினியின் கண்ணில் வீசியுள்ளார். அதில் நிலை தடுமாறிய யாமினியை, இரக்கமின்றி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரது கழுத்தை அறுத்துள்ளார். அதனால், ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த யாமினி பிரியா, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர், ஸ்ரீராம்புரம் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர்.

Advertisment

அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மாணவி யாமினி பிரியாவின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீசார், கொலை செய்துவிட்டு தப்பியோடிய விக்னேஷை தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேலும், அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் கைப்பற்றி, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

காதலை ஏற்க மறுத்த இளம்பெண்ணின் கண்ணீல் மிளகாய் பொடி வீச்சி, கழுத்தறுத்த கொலை செய்த இளைஞனின் வெறிச்செயல் அந்த பகுதியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.