உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில், ஆகஸ்ட் 27 ஆம் தேதி அன்று, புர்கா அணிந்த ஒரு இளம்பெண் தில்பந்தேஸ்வர் பாதையில் உள்ள சந்து வழியாக சந்தைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, ஸ்கூட்டரில் பின்னால் வந்த ஒரு இளைஞர், அந்தப் பெண்ணை தவறாக தொட்டு, ஆபாசமாக பேசிவிட்டு,   அங்கிருந்து வேகமாக தப்பிச் சென்றார்.

Advertisment

இந்த சம்பவத்தால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான அந்த பெண், தனது வீட்டிற்கு சென்று பெற்றோரிடம் நடந்தவற்றை கூறி கதறி அழுதுள்ளார். இதைத் தொடர்ந்து, பெண்ணின் குடும்பத்தினர் குற்றவாளியை கண்டறிய தீவிரமாக தேடுதல் பணியை தொடங்கினர். தில்பந்தேஸ்வர் பாதையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது, அந்த இளைஞர் பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட காட்சிகள் தெளிவாக பதிவாகியிருந்தன.

சிசிடிவி காட்சிகளில் பதிவான ஸ்கூட்டரின் பதிவு எண்ணை வைத்து, வாகனத்தின் உரிமையாளரின் முகவரியை குடும்பத்தினர் கண்டறிந்தனர். அந்த முகவரி வாரணாசியைச் சேர்ந்த தன்வீர் அக்தர் என்பவருடையது என்பதும், பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டவர் அவரே என்பதும் உறுதியானது.  

இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண்ணும் அவரது உறவினர்களும் தன்வீரின் வீட்டிற்கு சென்று, அவரை வெளியே இழுத்து வந்து கடுமையாக கண்டித்து தாக்கினர். இதில், பாதிக்கப்பட்ட பெண் தன்வீரின் முகத்தில் அறைந்து, “இனிமேல் எந்தப் பெண்ணிடமாவது இப்படி நடந்து கொள்வாயா?” என்று எச்சரித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Advertisment

பின்னர், சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தன்வீர் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறை  வழக்குப் பதிவு செய்து, தன்வீர் அக்தரை கைது செய்தது. காவலில் உள்ள தன்வீர் மன்னிப்பு கேட்கும் மற்றொரு வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. மேலும், அவரிடம் தொடர் விசாரணை நடத்தப்பட்டு, தற்போது சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த சம்பவம் வாரணாசியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள், குறிப்பாக பெண்கள், இதுபோன்ற செயல்களுக்கு எதிராக கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும், பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.