தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகா, மேக்கிழார்பட்டியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மகன் 23 வயதான சிவபாரதி. இவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.
இந்நிலையில், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி, சிவபாரதி சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, சிறுமி தற்போது கர்ப்பமாக உள்ளார். இதனிடையே, உடல்நிலையில் ஏற்பட்ட மாற்றங்களை உணர்ந்த சிறுமியின் தாய், இது குறித்து விசாரித்திருக்கிறார். அப்போது, சிவபாரதி தன்னை ஏமாற்றி வன்கொடுமை செய்ததாக சிறுமி தெரிவித்திருக்கிறார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய், கடந்த பிப்ரவரி மாதம் ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிவபாரதி மீது புகார் அளித்துள்ளார். ஆனால், காவல்துறையினர் புகார் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் பலமுறை காவல் நிலையத்தில் முறையிட்டும், காவல்துறையினர் உரிய பதில் அளிக்க மறுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதனால் மனமுடைந்த சிறுமியின் தாய், தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது, அவர் கூறியதாவது: “சிவபாரதி என் மகளை ஏமாற்றி கர்ப்பமாக்கிவிட்டான். இது குறித்து அவரது பெற்றோரிடம் கேட்டபோது, அவர்கள் சிவபாரதியை மறைத்து வைத்துவிட்டு, இந்தக் குழந்தைக்கு என் மகன் பொறுப்பல்ல என்று இழிவாகப் பேசுகின்றனர். மேலும், கொலை மிரட்டல் விடுகின்றனர். என் மகளுக்கு வேறு யாரும் இல்லை; நான் மட்டுமே இருக்கிறேன். என்னால் தொடர்ந்து போராட முடியவில்லை. வாரம் வாரம் காவல் நிலையத்தில் முறையிட்டு வருகிறேன். ஆனால், ஒரு நாள் கூட என் மகளுக்கு நீதி கிடைக்கவில்லை.
பிப்ரவரி மாதம் புகார் அளித்தேன். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. புகார் குறித்து கேட்டால், ‘இன்று கண்டுபிடித்து விடுகிறோம், நாளை கண்டுபிடித்து விடுகிறோம்’ என்று கூறி அலைக்கழிக்கிறார்கள். ‘நாங்கள் வெத்தைலைல மை போட்டா கண்டுபிடிக்க முடியும்? கொஞ்சம் பொறுங்கள், கண்டுபிடித்து தருகிறோம்’ என்று கடந்த ஐந்து மாதங்களாக கூறி வருகிறார்கள். ஏழையாகப் பிறந்தது குற்றமா?” என்று கதறி அழுதுள்ளார்
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சிறுமியின் தாயை சமாதானப்படுத்திய காவல்துறையினர், உரிய விசாரணை மேற்கொண்டு நீதி பெற்றுத் தரப்படும் என்று வாக்குறுதி அளித்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் ஆட்சிய அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.