ஓசூரில் பட்டதாரி இளைஞர் ஒருவர் நாய் கடிக்குச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

ஓசூர் மாவட்டம் தின்னூர் பகுதியைச் சேர்ந்தவர் எட்வின் பிரியன். எம்.பி.ஏ பட்டதாரியான இவர் சில தினங்களுக்கு முன்பு நாய் கடிக்கு உள்ளாகியதாகக் கூறப்படுகிறது. நாய் கடித்த தினத்தன்று ஆரம்பச் சுகாதார நிலையத்திற்கு எட்வின் சென்றுள்ளார். அங்கு முதற்கட்ட சிகிச்சைக்குப் பிறகு தனியார் மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

அப்பொழுது தனியார் மருத்துவமனை நிர்வாகம் நாய் கடி என்பதால் அரசு மருத்துவமனையிலேயே சிகிச்சை பெறும்படி அறிவுறுத்தியுள்ளனர். அதன்படி தளியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு எட்வின் பிரியன் சென்றுள்ளார். தொடர்ந்து அங்கு அவர் ரேபிஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு இரவு நேரத்தில் பிரியன் கொண்டு செல்லப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சையில் இருந்த அவர் நேற்று நள்ளிரவில் அலறியபடி இருந்துள்ளார். சிறிது நேரத்திலேயே உறக்க நிலைக்குச் சென்ற எட்வின் பிரியன், திடீரென சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தது அங்கு பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. காலை நேரத்தில் போலீசார் இது சம்பந்தமாக விசாரணை மேற்கொண்டனர். அதேபோல் ஓசூர் பகுதியை சேர்ந்த செய்தியாளர்கள் சிலரும் அந்த பகுதியில் செய்தி சேகரிப்பதற்காக வந்திருந்தனர்.

இந்நிலையில் அந்த நேரத்தில் அங்கிருந்த மருத்துவப் பணியாளர்கள், பணியில் இருந்தவர்கள் என அனவைரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள மருத்துவமனை நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது. ரேபிஸ் வைரஸ் சார்ந்த தொற்று இருந்தவர் உயிரிழந்த அந்த இடத்தில் இருப்பவர்களுக்கு நோய்த் தொற்று பரவி மேலும் பாதிப்பு ஏற்படுத்தும். எனவே இதில் சம்பந்தப்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

Advertisment

அதன்படி அங்கிருந்த செவிலியர்கள், காவலர்கள், எஸ்ஐ, இறந்த எட்வின் பிரியனின் உறவினர்கள், செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்கள் என 30க்கும் மேற்பட்டோருக்கு ஒருவருக்கு தலா மூன்று தடுப்பூசி என ரேபிஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. எட்வினின் உடல் தற்போது கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.