கொசுக்கடிக்கு ஆளான இளைஞர் ஒருவர், கொசுக்களைக் கொன்று பொட்டலம் கட்டி மாநகராட்சிக்கு அலுவலகத்திற்கு எடுத்துச் சென்று புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisment

சத்திஸ்கர் மாநிலத்தின் தலைநகர் ராய்ப்பூரைச் சேர்ந்தவர் தௌலால் படேல். இவர், கடந்த சில தினங்களாக கடுமையான கொசுக்கடிக்கு ஆளானார். தன்னை கடித்த கொசுக்கள் டெங்குவை பரப்பும் கொசுக்களாக இருக்கும் என பயந்த படேல், கொசுக்கடியால் தனக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சத்தில் ஒரு மருத்துவரை அணுகினார்.

Advertisment

அப்போது, அந்த மருத்துவர் முதலில் கொசுக்களை பரிசோதித்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்தினார். மருத்துவரின் ஆலோசனையை ஏற்ற படேலும், அந்த கொசுக்களை கையோடு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு அந்த கொசுக்களை பரிசோதனை செய்ததில், அக்கொசுக்கள் டெங்குவை பரப்பும் கொசுக்கள் இல்லை என தெரியவந்தது.

இருப்பினும், நகரில் கொசுக்களை கட்டுப்படுத்த மாநகராட்சியிடம் நூதனமாக புகார் அளிக்க முடிவு செய்த படேல், தன்னை கடித்தக்  கொசுக்களைக் கொன்று பொட்டலம் கட்டி மாநகராட்சிக்கு அலுவலகத்திற்கு நேரில் கொண்டு சென்றார். அதன் பின்னர் தன்னுடைய புகாரையும், பாலிதீன் பையில் வைத்திருந்த கொசுக்களையும் மாநகராட்சி அலுவலர்களிடம் கொடுத்து புகார் அளித்தார். மாநகராட்சி கொசுவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காத நிலையில், படேல் இவ்வாறாக நூதனமான செயலில் ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பேசுபொருளாக மாறி வருகிறது.

Advertisment

இந்த சம்பவத்தை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் புகை மருந்து தெளித்தல் மற்றும் கொச புழுக்களை அழித்தல் போன்ற பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் கொசு கட்டுப்பாட்டிற்காக கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவிடப்பட்ட போதிலும், திறந்த வடிகால்கள் கொசு உற்பத்திக்கான இடங்களாக மாறிவிடுகின்றன என்றும் இவைகள் சரிசெய்யப்படாமலே இருப்பதாகவும் மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.