பஞ்சாப் மாநிலம் லூதியானாவில், ஜலந்தர் பைபாஸ் நெடுஞ்சாலையில் இளம்பெண்ணிடம் ஆட்டோரிக்ஷாவில் நடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தின் வீடியோ ஒன்று வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
பில்லாரில் இருந்து நவன்ஷாஹருக்கு செல்லும் பேருந்தைப் பிடிப்பதற்காக மீனா குமார் என்ற இளம்பெண் ஜலந்தர் பைபாஸில் ஆட்டோரிக்ஷா ஒன்றில் ஏறியுள்ளார். ஏற்கனவே அந்த ஆட்டோரிக்ஷாவில் ஓட்டுநர் அல்லாமல் இரண்டு ஆண்களும் இருந்துள்ளனர். இருப்பினும், பேருந்தைப் பிடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் மீனா குமார் அந்த ஆட்டோரிக்ஷாவில் ஏறி பயணித்து வந்துள்ளார்.
ஆனால், ஆட்டோரிக்ஷாவில் பயணித்துக்கொண்டிருந்த சிறிது நேரத்திலேயே ஓட்டுநர் உட்பட மூவரும் கொள்ளையர்கள் என்பதை மீனா குமார் உணர்ந்திருக்கிறார். அதே சமயம், தான் இறங்க வேண்டிய இடத்தை ஆட்டோரிக்ஷா நெருங்கிவிட்டதால் எதுவுமே பேசாமல் அமைதியாக இருந்துள்ளார். இந்த நிலையில், பின்னால் இருந்த இரண்டு ஆண்களில் ஒருவர், ஆட்டோவை மெதுவாக ஓட்டு என்று கூறியிருக்கிறார். அதன்படி ஓட்டுநரும் ஆட்டோவின் வேகத்தைக் குறைத்து மெதுவாகச் சென்றிருக்கிறார்.
இந்த நிலையில் திடீரென ஆட்டோவில் இருந்த கொள்ளையர்கள் இருவரும், மீனாவைத் தாக்கி அவரது கையை ஷாலால் கட்டி, கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளனர். மேலும், தன்னிடம் இருக்கும் நகை, பணம், செல்போன் உள்ளிட்டவற்றைக் கேட்டு மிரட்டியிருக்கின்றனர். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து துணிச்சலாக செயல்பட்ட மீனா குமார் கத்திக் கூச்சலிட்டுள்ளார். மேலும் ஆட்டோவில் இருந்து வெளியே தொங்கியபடி மற்ற வாகன ஓட்டிகளின் கவனத்தைத் தன் பக்கம் திருப்பியிருக்கிறார்.
இதனைப் பார்த்த மற்ற வாகன ஓட்டிகள் ஆட்டோவைப் பின்தொடர்ந்து சென்று வண்டியை நிறுத்துமாறு கூறியிருக்கின்றனர். ஆனால், கொள்ளையர்கள் வண்டியை நிறுத்தாமல் செல்ல, மீனா குமாரும் தொங்கியபடி 1 கிமீ தூரம் ஆட்டோவிலேயே பயணித்தார். ஒருவழியாகப் பின்னால் வந்த மற்ற வாகன ஓட்டிகள் ஆட்டோரிக்ஷாவை வழிமறித்து மீனா குமாரை மீட்டனர். ஆனால், மூன்று கொள்ளையர்களில் ஒருவர் தப்பியோட, மீதமுள்ள இரண்டு பேரைப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இதனைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த லூதியானா காவல்துறையினர் இரண்டு பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், தப்பியோடிய மூன்றாவது நபரையும் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இதற்கிடையே இந்தக் கொள்ளை சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மீனாவின் தைரியமும், அவருக்கு உதவிய பொதுமக்களின் விரைவான நடவடிக்கையும் பாராட்டத்தக்கவை எனக் கருத்து தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள், இந்தச் சம்பவத்தின் மூலம் பஞ்சாப் மாநிலத்தில் சட்ட ஒழுங்கு குறித்த கேள்வியை எழுப்பியுள்ளனர். பட்டப்பகலில் ஓடும் ஆட்டோவில் இளம்பெண்ணிடம் நடந்த இந்தக் கொள்ளை சம்பவத்தை எதிர்க்கட்சிகள் பேசுபொருளாக மாற்றியிருக்கின்றனர்.