தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள, தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) தலைவர் விஜய், தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றி வருகிறார்.

Advertisment

அந்த வகையில் நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் நேற்று (20.09.2025) சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கியிருந்த விஜய், திமுகவிற்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் தான் இனி போட்டி எனவும் ஒவ்வொரு சுற்றுப்பயணப் பேச்சிலும் விஜய் தெரிவித்து வருகிறார்.

இந்தநிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரிடம் செய்தியாளர்கள் இது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளிக்கையில், 'ஆசிரியர்கள் மாணவர்கள் கேட்கின்ற கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் பதில் சொல்வார்கள். ஆனால் மாணவர்கள் பாசவாரா இல்லையா என்பது பரிட்சை எழுதி மதிப்பின் வந்த பிறகுதான் தெரியும். அது போல மாணவராக இருந்து எழும்புகின்ற கேள்விக்கு ஆசிரியராக அனுபவம் பெற்ற கட்சிகள், ஆளுகின்ற கட்சி, எதிர்க்கட்சி, தேசிய கட்சி, மாநிலக் கட்சிகள் என எல்லாம் அதற்குரிய பதிலைச் சொல்கிறார்கள். அதில் தெளிவடைந்து விஜய் நன்றாக பரிட்சை எழுதி மதிப்பெண் பெற்று அதற்குப் பிறகு அதற்குரிய விவாதமாக மாறும்.

சில நேரங்களில் மாணவர்கள் எழுப்புகின்ற கேள்விகள், சந்தேகங்கள் அது அவர்களே அறியாமல் கேட்கும் கேள்வியாக இருக்கலாம். புரியாமல் கேட்கும் கேள்வியாக இருக்கலாம். படிக்காமல் கேட்கின்ற கேள்வியாக இருக்கலாம். வரலாறு தெரியாமல் கேட்கும் கேள்வியாக இருக்கலாம். திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற 75 ஆண்டுகள் வலிமையுள்ள கட்சி என்று ஸ்டாலின் சொல்லுகிறாரே. தமிழக முழுவதும் கிளைக் கழகத்தைக் கொண்டு இருக்கின்ற அந்த திராவிட முன்னேற்றக் கழகத்தை வீழ்த்துகின்ற சக்தி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தான் இருக்கிறது என்பது இந்த உதயகுமார் சொல்லவில்லை எம்ஜிஆர் கண்ட கனவு. எம்ஜிஆர் கண்ட கனவை தான் எல்லோரும் சொல்கிறார்கள் அவர் கொண்ட கொள்கை அவர் கொண்ட லட்சியம் ஜெயலலிதா எடப்பாடி என்ற சாமானியரும் எம்ஜிஆரின் கனவை நினைவாக்குவதற்கு, தமிழக மக்களை காப்பாற்றுவதற்கு உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே அதிமுகவிற்கு மாற்று திமுக. திமுகவிற்கு மாற்று அதிமுக இது காலம் காலமாக தமிழ்நாட்டு மக்கள் அளித்து வருகின்ற தீர்ப்பு''என்றார்.

Advertisment