தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் இன்று அக்கட்சியின் தலைமை அலுவலகமான சென்னை பனையூரில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேடையில் விஜய் பேசுகையில்,''கொள்கை எதிரிகள் மற்றும் பிளவுவாத சக்திகளுடன் என்றைக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ கூட்டணி இல்லை. ஒன்றிய அளவில் மலிவான அரசியல் ஆதாயங்களுக்காக மக்களை மத ரீதியாக பிளவுபடுத்தி மக்களிடையே வேற்றுமையை விதைத்து அதில் குளிர்காய நினைக்கும் பாஜகவின் இந்த விஷமத்தனமான வேலைகள் வேறு எங்கு வேண்டுமானாலும் எடுபடலாம் தமிழ்நாட்டில் ஒருபோதும் எடுபடாது.
பெரியாரை அவமதித்தோ, அண்ணாவை அவதூறுக்கு உள்ளாக்கியோ அல்லது தமிழ்நாட்டின் மதிப்பிற்குரிய தலைவர்களை வைத்து அரசியல் செய்ய நினைத்தால் ஒருபோதும் பாஜக வெற்றி பெற இயலாது. சுயநல அரசியல் லாபங்களுக்காக பாஜகவுடன் கூடிக்குலைந்து கூட்டணி போக திமுகவோ அதிமுகவோ இல்லை தமிழக வெற்றிக் கழகம். கூட்டணி என்றாலும் தமிழக வெற்றிக் கழகம் தலைமையில் அமையும் கூட்டணி திமுக மற்றும் பாஜகவிற்கு எதிராகத்தான் இருக்கும் என்பதையும், அதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்பதையும் உறுதிப்பட செயற்குழு வாயிலாக தெரிவித்துக் கொள்கிறோம்.
பரந்து விமான நிலைய பிரச்சனை தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறோம். அந்த மக்களும் நம்ம மக்கள் தானே. ஏன் அந்த அக்கறையும், மனிதாபிமானமும் இல்லை. எதிர்க்கட்சியாக இருந்தால்தான் உங்களுக்கு அக்கறை இருக்குமா? மக்களின் முதல்வர் என நா கூசாமல் சொல்றீங்க. இதுல பரந்தூர் ஏர்போர்ட் பிரச்சனைக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லாத மாதிரி வேற காட்டிக்கிறீங்க. போராடிக் கொண்டிருக்கும் மக்களை தயவு செஞ்சு சந்தித்து பேசி அங்கு விமான நிலையம் வராது என்ற உறுதியை நீங்கள் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் பரந்தூர் மக்களை நானே அழைத்துக்கொண்டு வந்து தலைமைச் செயலகத்தில் உங்களை நேரில் சந்தித்து...அப்படி ஒரு சூழலை நீங்க உருவாக்க மாட்டீங்க என நம்புகிறேன்'' என்றார்