தமிழ்நாட்டில் ஏ.சி, ஸ்மார்ட் வகுப்பறைகள், கண்காணிப்பு கேமராக்கள் என ஹைடெக் வசதிகளுடன் இயங்கும் நம்பர் ஒன் அரசுப் பள்ளி புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியம் பச்சலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி என்பதை நக்கீரன் பலமுறை வெளிப்படுத்தியுள்ளது.
"ஒருமுறை எங்கள் பள்ளிக்கு வந்து பாருங்க முதல்வரய்யா" என்று தமிழக முதல்வரை தங்கள் பள்ளிக்கு அழைப்புக் கொடுத்தனர் இப்பள்ளி மாணவர்கள். கடந்த ஆண்டு புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வந்த முதலமைச்சர் பச்சலூர் பள்ளிக்கு வருவார் என்று அதிகாரிகள் துரிதமாக வேலைகளை பார்த்தனர். ஆனால் கடைசி நேரத்தில் அந்த வாய்ப்பு நழுவிப் போனது.
இந்நிலையில் தான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவரும், முன்னாள் மாநிலச் செயலாளருமான ஜி.ராமகிருஷ்ணன் புதுக்கோட்டை மாவட்டத்தில் சில நிகழ்ச்சிகளுக்காக வந்திருந்தவர் பச்சலூர் அரசுப் பள்ளியையும் அப்பள்ளி தலைமை ஆசிரியரைப் பற்றியும் அறிந்து இன்று திங்கள் கிழமை காலை பள்ளிக்குச் சென்றுள்ளார்.
பள்ளி வளாகம், சுற்றுச் சூழலைப் பார்த்து வியந்தவர் தலைமை ஆசிரியர் அறையில் இயங்கும் கட்டுப்பாட்டு அறையைப் பார்த்து இந்த ஒரு இடத்தில் இருந்தே மொத்த பள்ளியையும் கண்காணிக்கவும் தகவல்களை பறிமாறலாம் போலவே என்றவர் ஒவ்வொரு வருப்பறையாகச் சென்றார்.
ஒவ்வொரு வகுப்பறையிலும் சில்லென்ற குளிர்சாதன வசதிமுடன் தொடுதிரையில் பாடங்கள் நடத்தப்படுவதையும் மாணவர்களின் நேர்த்தியான சீருடைகளையும் பார்த்தவர் அவர்களின் தமிழ், ஆங்கில நோட்டுகளை வாங்கிப் பார்த்து வியந்தவர் அரசுப் பள்ளியில் அத்தனை மாணவர்களும் ஒரே மாதிரியான அழகான எழுத்துககளாக உள்ளது. நல்ல பயிற்சி, நல்ல முயற்சி என்றார்.
அடுத்து, ஒரு வகுப்பறைக்குள் நுழைந்த போது அங்கே ஸ்மார்ட் போர்டில் ஒரு மாணவன் பாடம் நடத்துவதைப் பார்த்து வியந்து அந்த பாடம் சம்மந்தமாக மாணவனிடம் கேள்விகள் கேட்டு விளக்கம் பெற்றார். கிராமத்து மாணவர்கள் இந்த அளவிற்கு வளர்ந்திருப்பது பெருமையாக உள்ளது என்றார்.
ஒவ்வொரு வகுப்பறையிலும் மாணவர்களுடன் கலந்துரையாடும் போது, உங்க குடும்பம், பெற்றோர் என்ன செய்றாங்க என்று கேட்டவர் எல்லாரும் கூலி வேலை செய்றவங்க குடும்பத்தில் இருந்து வரும் மாணவர்கள் தான். ஆனால் உங்களுக்காக உங்கள் தலைமை ஆசிரியர் ஜோதிமணி, சக ஆசிரியர்கள், பெற்றோர்கள் தன்னார்வலர்கள் இத்தனை வசதிகளை செய்து கொடுத்திருக்கிறார்கள். தாங்கள் வெயிலில் வெந்தாலும் தங்கள் குழந்தைகள் ஏ சி அறையில் அமர்ந்து படிக்கட்டும் என்று உங்களை இங்கே அனுப்பி இருக்கிறார்கள்.
எவ்வளவு பணம் கொடுத்து தனியார் பள்ளிகளுக்கு அனுப்பினாலும் இத்தனை வசதிகள் கிடைக்காது. அதிக பணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளை விட இந்த அரசுப் பள்ளியில் அதிகமான வசதிகள் உள்ளது. உங்கள் தேவையறிந்து மேலும் செய்து கொடுக்கிறார்கள். அரரசாங்கமும் உங்களுக்காக ஏராளம் செய்கிறது.
நான் தமிழ்நாட்டில் நிறைய பள்ளிகளுக்கு சென்று இருக்கிறேன் ஆனால் தமிழ்நாட்டில் சிறந்த பள்ளி பச்சலூர் அரசுப் பள்ளி தான் என்பதை உறுதியாகச் சொல்கிறேன். இதே தலைமை ஆசிரியர் ஏற்கனவே மாங்குடி பள்ளியை இப்படி வைத்திருந்தார் அந்தப் பள்ளிக்கும் போய் பார்த்திருக்கிறேன். நீங்கள் நன்றாக படிக்க வேண்டும் என்று மாணவர்களிடம் கூறினார்.
தொடர்ந்து தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி ஆசிரியர்களையும் பாராட்டியவர் இது போல ஒவ்வொரு அரசுப் பள்ளியும் மாறினால் அரசுப் பள்ளிகளை மூடும் நிலை வராது என்றார்.