'You are a policeman... come in a khaki shirt' -shocking incident in mogapaire Photograph: (chennai)
சென்னை நொளம்பூரில் டிபன் வாங்கி விட்டு காசு தர மறுத்த போதை ஆசாமி தாக்குதலில் ஈடுபட்டதோடு அங்கு வந்த போலீசாரையே அந்த போதை நபர் மிரட்டி சட்டையை கிழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை முகப்பேர் கோல்டன் ஜார்ஜ் நகர் பகுதியில் பரபரப்பாக வாகனங்கள் சென்று கொண்டிருந்த சாலை அருகே உள்ள ஒரு டிபன் கடைக்கு வந்த கோபி என்ற நபர் உணவு பார்சல் கேட்டுள்ளார். கடைக்காரர் பார்சல் செய்து கொடுத்துவிட்டு பணம் கேட்டுள்ளார். உச்சக்கட்ட மதுபோதையில் இருந்த கோபி 'யாரிடம் பணம் கேட்கிறாய்; நான் யார் தெரியுமா?' எனக்கூறி விட்டு கடையில் வைக்கப்பட்டிருந்த பொருட்களை கீழே தூக்கிப் போட்டு உடைக்க முயன்றுள்ளார்.
அங்கிருந்த பொதுமக்கள் கோபியை தடுத்துள்ளனர். இதனால் பொதுமக்களை நோக்கி ஆபாசமான வார்த்தைகளால் கோபி திட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பொறுத்தது போதும் என போதை ஆசாமிக்கும் தர்ம அடி கொடுத்துள்ளனர். அந்த நபரும் பொதுமக்களை கண்மூடித் தனமாக தாக்க முயன்றுள்ளார்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு மஃப்டியில் வந்த போலீசார் ஒருவர் கோபியை அமைதியாக இருக்கும்படி கூறியுள்ளார். ஆனால் காவலரை நோக்கியும் அந்த நபர் தகாத வார்த்தைகளால் திட்டிக்கொண்டே காவலரை தாக்க முயன்றுள்ளார்.
போதை ஆசாமி தாக்கியதில் காவலரின் சட்டை கிழிந்தது. இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ''நீ போலீஸ் என்றால் காக்கி சட்டையில் வா.. நீ போலீசே இல்லை'' என அந்த போதை ஆசாமி சாலையில் புரண்டு வம்பிழுத்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் குறித்து ஜெ.ஜ.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல் நேற்று திருப்பூர் அரிசிக்கடை வீதியில் உள்ள வீரராகவ பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாட்டிற்காக பொதுமக்கள் அதிகளவில் வந்திருந்த நேரத்தில் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக திருப்பூர் தெற்கு போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அங்கு வந்த நபர் கஞ்சா போதையில் இருந்தது தெரிந்தது.
அந்த நபர் திடீரென போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு கையில் வைத்திருந்த கத்தியால் போலீசாரை தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
போதை ஆசாமிகளால் போலீசார் மீதே நடத்தப்படும் தாக்குதல் சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Follow Us