Yogi Nath meets Modi Photograph: (bjp)
உத்திர பிரதேசம் மாநிலத்தில் பாஜக ஆட்சி செய்து வருகிறது. யோகி ஆதித்யநாத் அம்மாநிலத்தின் முதல்வராக உள்ளார். மோடிக்கு பிறகு இவர் தான் அடுத்த பிரதமர் என்று ஒரு சர்ச்சை சில மாதங்களுக்கு முன்பு வரை இருந்து வந்தது. இதன் காரணமாக மோடி மற்றும் ஆதித்யநாத் ஆகியோருக்கிடையே கருத்து மோதல் ஏற்பட்டது. இதனால் உத்திரபிரதேசத்தில் பாஜக-வில் இரு பிளவுகள் ஏற்பட்டு, இதனால் கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக பின்னடைவை சந்தித்தது. மேலும் மோடிக்கும் யோகிக்கும் இடையே உரசல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் இன்று (05-01-26) யோகி ஆதித்யநாத் பிரதமர் அலுவலகத்தில் மோடியை சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பின் போது உத்தரபிரதேச முதல்வர் யோகி, ராமர் கோயிலின் மாதிரியை பிரதமர் நரேந்திர மோடிக்கு பரிசளித்தார். இந்த பரிசு இளஞ்சிவப்பு நிறத்தில் "மீனாகரி" கலையை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. சுமார் ஒரு மணி நேரம் இந்த பேச்சு வார்த்தை நடந்ததாகக் கூறப்படுகிறது. இதில் அம்மாநிலத்தில் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து பேசப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த சந்திப்பு குறித்து யோகி ஆதித்யநாத் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ஒரு பதிவில், "பிரதமரின் தொலைநோக்கு பார்வை ஒரு புதிய உத்தரபிரதேசத்தின் வளர்ச்சிப் பயணத்திற்கு தொடர்ந்து புத்துணர்ச்சி அளிக்கிறது" என்று கூறினார். நேரம் ஒதுக்கி மாநிலத்தின் வளர்ச்சிக்கு வழிகாட்டுதல் வழங்கியதற்காக மோடிக்கு நன்றி தெரிவித்த அவர், இந்த சந்திப்பு மாநிலத்தில் ஆளுகை மற்றும் வளர்ச்சிக்கு ஒரு புதிய உத்வேகத்துடன் ஆதாரமாக அமைந்தது என்று தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பை உறுதிப்படுத்தும் விதமாக, பிரதமர் அலுவலகம் இந்த சந்திப்பின் இரண்டு புகைப்படங்களை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. மத்திய அரசுக்கும் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரபிரதேச அரசுக்கும் இடையே உரசல் இருப்பதாக எதிர்க்கட்சிகள் பலமுறை சுட்டிக்காட்டி வரும் நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
Follow Us