உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் போன்ற மாநிலங்களில் ஒவ்வொரு ஆண்டின் ஜூலையில் இருந்து ஆகஸ்ட் வரையிலான கன்வார் யாத்திரையை இந்துக்கள் மேற்கொண்டு வருகிறார்கள். உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹரித்வார் உள்ளிட்ட புனித தலங்களுக்குச் சென்று கங்கை நீரை எடுத்து வந்து தங்கள் ஊர்களில் உள்ள சிவன் கோவில்களில் அபிஷேகம் நடத்துவார்கள். அதன்படி, கன்வார் யாத்திரை வரும் ஜூலை 11ஆம் தேதி தொடங்க உள்ளது.
இந்த நிலையில், முந்தைய ஆண்டுகளைப் போல் இந்தாண்டும் கன்வார் யாத்திரை செல்லும் வழித்தடத்தில் உள்ள அனைத்து உணவகங்களிலும் உரிமையாளர்களின் பெயர்களை காட்சிப்படுத்தும் வகையில் பலகைகள் வைக்க வேண்டும் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “கன்வார் யாத்திரையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமூக விரோதிகள் மாறுவேடத்தில் சேர வாய்ப்புள்ளது.
அதனால், கன்வார் யாத்திரை செல்லும் பாதையில் திறந்தவெளி இறைச்சி விற்பனை செய்யக் கூடாது. முந்தைய ஆண்டுகளில் கடைபிடிக்கப்பட்டது போல், கடைக்காரர்கள் தங்கள் கடைகளில் தங்கள் பெயர்களைத் தெளிவாகக் காட்சிப்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். இதன் மூலம் சட்டம் ஒழுங்கு பேணப்படும், பக்தர்களின் மத உணர்வுகள் மதிக்கப்படும். மத ஊர்வலத்தின் போது எந்தவித இடையூறும் ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியாக இருக்க வேண்டும்” என்று உத்தரவிட்டார்.
யோகி ஆதித்யநாத்தின் இந்த உத்தரவிற்கு காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இது குறித்து சமாஜ்வாதி கட்சித் தலைவர் ஃபக்ருல் ஹாசன் கூறுகையில், “அனைத்து கடைகளும் மூடப்பட்டால், சிறு விற்பனையாளர்களும் தினக்கூலிகளும் தங்கள் குடும்பங்களை எப்படி பாதுகாக்க முடியும்? பெயர் பலகைகளை காட்சிப்படுத்த வேண்டுமென்றால், எந்தவொரு சமூகத்தினரையும் குறிவைக்காமல் அனைவருக்கும் ஒரே மாதிரியான பலகைகள் பயன்படுத்தப்பட வேண்டும்” என்று கூறினார்.