கர்நாடக மாநிலத்தின் யோகா சங்கத்தின் செயலாளராகப் பொறுப்பு வகித்து வரும் நிரஞ்சன மூர்த்தி, ராஜராஜேஸ்வரி நகரில் யோகா மையம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த மையத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். இந்த நிலையில் 2021-ஆம் ஆண்டு நிரஞ்சன மூர்த்தியின் பயிற்சி மையத்திற்கு 15 வயது உள்ள சிறுமி ஒருவர் யோகா பயிற்சிக்கு வந்துள்ளார்.
அதன்பிறகு சிறுமியின் திறமையைப் பார்த்து 2023-ஆம் ஆண்டு தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற யோகா பயிற்சிக்கு நிரஞ்சன மூர்த்தி அவரை அழைத்துச் சென்றுள்ளார். அப்போது சிறுமிக்கு 17 வயதாகியுள்ளது. தாய்லாந்து பயணத்தின் போது, நிரஞ்சன மூர்த்தி பாலியல் ரீதியாக சிறுமிக்கு தொல்லை கொடுத்துள்ளார். அதன்பிறகு நாடு திரும்பிய சிறுமி நிரஞ்சன மூர்த்தியின் அருவருக்கத்தக்க செயலால், அதன்பிறகு யோகா பயிற்சி மையத்திற்குச் செல்வதை நிறுத்திக்கொண்டார். ஆனால், வீட்டில் நிரஞ்சன மூர்த்தி குறித்து எதுவும் சிறுமி தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில் தான் சிறுமி பெங்களூருவில் உள்ள வேறு ஒரு யோகா பயிற்சி மையத்தில் சேர்ந்திருக்கிறார். ஆனால் அதுவும் நிரஞ்சன மூர்த்தியுடையது என்று முதலில் சிறுமிக்குத் தெரியவில்லை. பின்னர் தான் சிறுமிக்கு உண்மை தெரியவந்திருக்கிறது. அப்போது சிறுமியை அழைத்த நிரஞ்சன மூர்த்தி சர்வதேச அளவில் நடக்கும் யோகா போட்டியில் பங்கேற்க வைத்து பதக்கம் பெற வைப்பதாகவும், வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதாகவும் கூறியுள்ளார். இப்படி சிறுமிக்கு ஆசையைக் காட்டி பல முறை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி கூட சிறுமியை நிரஞ்சன மூர்த்தி பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் தொடர் மன உளைச்சலுக்கு ஆளான சிறுமி, ஒரு கட்டத்தில் தனக்கு நடந்து வரும் கொடுமைகள் குறித்து பெற்றோரிடம் கூறி கதறியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் பெங்களூரு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே நிரஞ்சன மூர்த்தி தலைமறைவான நிலையில், அவரைப் பிடிக்க பெங்களூரு போலீசார் தனிப்படை அமைத்துத் தீவிரமாகத் தேடி வந்தனர். தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு நிரஞ்சன மூர்த்தியைச் சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர்.
மேலும், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், பயிற்சி மையத்தில் பயிலும் மற்ற மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாரா என்று குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, தனது யோகா மையத்தில் 10 முதல் 15 பெண்களிடம் அத்துமீறி நடந்துகொண்டிருப்பது தெரியவந்திருக்கிறது. அத்துடன் நிரஞ்சன மூர்த்தியிடமிருந்து செல்போன் மற்றும் ஒரு சில வீடியோக்களும் மீட்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கர்நாடக மாநில யோகா சங்கத்தின் செயலாளராக இருக்கும் நிரஞ்சன மூர்த்தி பாலியல் வழக்கில் சிக்கியிருப்பது மற்ற யோகா பயிற்சி மையத்தினர் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.