மதுரை மாவட்டம் பாரபத்தி கிராமத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு இன்று (21.08.2025) தொடங்கி நடைபெற்று வருகிறது. உள்ளது. சுமார் 216 மீட்டர் நீளம், 60 அடி அகலத்தில் மாநாட்டு மேடை அமைக்கப்பட்டு அக்கட்சி நிர்வாகிகள், முன்னணி தலைவர்கள் அமர்வதற்கு 200 இருக்கைகள் போடப்பட்டுள்ளன. சுமார் 2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்றுள்ள இந்த மாநாடு இரவு 7 மணிவரை நடைபெற உள்ளது.
இதற்கிடையே மாநாட்டுக்கான நிகழ்ச்சி நிரல் வெளியாகியது. அதன்படி “உங்கள் விஜய்.... நான் வரேன்.... ” என்ற பாடலுடன் மேடைக்கு வந்த விஜய் அவரது பெற்றோர் மற்றும் நிர்வாகிகளிடம் வாழ்த்துகளைப் பெற்றுக் கொண்டு தொண்டர்கள் மத்தியில் ரேம்ப் வாக் மேற்கொண்டார். அச்சமயத்தில் விஜயை நெருங்கி வந்த தொண்டர்களை அருகில் இருந்த பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தினர். அதனைத் தொடர்ந்து கொள்கைப் பாடலும், கொடி பாடலும் வெளியிடப்பட உள்ளது.
அதன் பிறகு கட்சிக் கொடி ஏற்றி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வரவேற்புரையும் மாநாடு முறைப்படி தொடங்கியது. இந்த மாநாட்டு மேடையில் கட்சியின் விஜயின் பெற்றோரான எஸ்.ஏ.சந்திரசேகர் - சோபாவுக்கு இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் உரையாற்றி வருகின்றனர்.
இந்த நிகழ்ச்சி கட்சியின் கொள்கை பரப்புச் பொதுச்செயலாளர் அருண்ராஜ் ஐஆர்எஸ் பேசுகையில், ''அழகர் ஆற்றில் இறங்கினால் சித்திரை திருவிழா. நம்ம வெற்றி தலைவர் மதுரை மண்ணில் இறங்கினால் அது அரசியல் திருவிழா. கூட்டம் கூட்டியவர்கள் எல்லாம் தலைவனாக முடியாது என்று சொல்வார்கள். இது கூட்டம் இல்லை இது படை. வெற்றி தலைவரின் போர்ப்படை. இது கூச்சல் அல்ல இந்த சத்தம் போர் முரசு கொட்டும் சத்தம். கேட்குதா சார். என்னவெல்லாம் சொன்னீங்க. எங்கள் தலைவர் கட்சி ஆரம்பிக்கும் பொழுது கேட்டார்கள் 'விஜய்க்கு எல்லாம் அரசியல் தெரியுமா?' ஆமாம் விஜய்க்கு அரசியல் தெரியாது. அவருக்கு ஊழல் பண்ணத் தெரியாது, பொய் வாக்குறுதி கொடுத்து ஏமாற்ற தெரியாது. அது மட்டும் இல்லை சொந்த குடும்பத்தைக் காப்பாற்ற மாநில உரிமையை அடமானம் வைக்கும் சுயநலம் அரசியல் தெரியாது. அது தெரிய வேண்டிய அவசியமும் இல்லை. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற உண்மையான எண்ணம் இருக்கிறது. அந்த அரசியல் மட்டும் தான் தெரியும். அதைத் தான் செய்யப் போகிறார்'' என்றார்.