x Husband arrested for wife over property and then acting out Photograph: (police)
திருப்பத்தூரில் மனைவியை கொன்றுவிட்டு நாடகமாடிய கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் திருக்குமரன் அறிவழகி தம்பதியினர். திருக்குமரனின் மாமனார் ரயில்வே துறையில் பணியாற்றி விட்டு ஓய்வு பெற்றவர் என்று கூறப்படுகிறது. இவர் தன்னுடைய மகள் அறிவழகி பெயரில் 20 லட்சம் ரூபாய்க்கு மேல் மதிப்புடைய வீடு மற்றும் சொத்துக்களை எழுதி வைத்துவிட்டு இறந்து விட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் திருக்குமரன் 'உனது தந்தை உனக்கு எழுதிக் கொடுத்த வீட்டையும் சொத்தையும் எனக்கு மாற்றிக் கொடுக்க வேண்டும்' என அறிவழகியிடம் தொடர்ந்து கேட்டு வந்துள்ளார். ஆனால் மனைவி அறிவழகியோ தொடர்ந்து மறுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இதுதொடர்பாக நிகழ்ந்த வாக்குவாதத்தில் திருக்குமரன் அறிவழகியை கொலை செய்துவிட்டு அவர் தற்கொலை செய்து கொண்டதாக நாடகம் ஆடியுள்ளார்.
பின்னர் போலீசார் விசாரணையில் கணவனே மனைவியை சொத்துக்காக கொலை செய்துவிட்டு நாடகமாடியது தெரியவந்தது. இந்த வழக்கில் திருக்குமரனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.