Skip to main content

தொடர்ந்து முதலிடத்தைப் பிடித்த இந்தியர்கள்; உலக வங்கி அறிவிப்பு

Published on 22/12/2023 | Edited on 22/12/2023
World Bank Notice to first place Indians for sending money back home

இந்தியாவில் வாழும் மக்கள் பலரும், தனது பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்காக சிங்கப்பூர், மலேசியா, துபாய் போன்ற வெளிநாடுகளில் தான் வேலை செய்து வருகின்றனர். அங்கு பணிபுரிந்து கொண்டு ஈட்டிய தொகையை தனது குடும்பத்தினருக்கு அனுப்பி வருகின்றனர். அப்படி வெளிநாடுகளில் பணியாற்றி தாயகத்துக்கு பணம் அனுப்புவதில் இந்தியர்கள் தான் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளனர் என்று உலக வங்கி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‘ வெளிநாடு வாழ் இந்தியர்கள் தாயகத்துக்கு பணம் அனுப்புவது கடந்த 2014ஆம் ஆண்டில் 24.4 சதவீதமாக இருந்தது. அப்போது, இது வரலாற்று உச்சமாக பார்க்கப்பட்டது. நடப்பாண்டில் இந்த வளர்ச்சி 12.4 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், வெளிநாடு வாழ் இந்தியர்கள் 2023ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு அனுப்பும் தொகை 1,400 கோடி டாலர் அதிகரித்து 12,500 கோடி டாலராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த ஆண்டில் தெற்காசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் வெளிநாடுகளில் பணியாற்றி தனது சொந்த நாடுகளுக்கு அனுப்பும் மொத்த பணத் தொகையில், இந்தியர்கள் அனுப்பும் பணத்தின் பங்கு 66 சதவீதமாக அதிகரிக்கவிருக்கிறது. அதன்படி, இந்தியர்கள் கிட்டத்தட்ட 10.38 லட்சம் கோடி ரூபாயை தனது தாயகத்துக்கு அனுப்பியுள்ளனர். முந்தைய ஆண்டான 2022ஆம் ஆண்டில் இது 63 சதவீதமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி, வெளிநாடுகளில் பணியாற்றி ஈட்டிய தொகையை தங்களது சொந்த நாட்டுக்கு அனுப்புவதில் இந்தியர்கள் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளனர்.

இந்தியாவுக்கு அடுத்தபடியாக மெக்ஸிகோ 2வது இடத்தை பிடித்துள்ளது. அந்த வகையில், வெளிநாடு வாழ் மெக்ஸிகோ நாட்டவர்கள் தனது சொந்த நாட்டுக்கு அனுப்பும் தொகை இந்த ஆண்டில் 6,700 கோடி டாலராக இருக்கும். மேலும், மெக்ஸிகோவை தொடர்ந்து, மூன்றாவது இடத்தை சீனா (5,000 கோடி டாலர்), நான்காவது இடத்தை பிலிப்பைன்ஸ் (4,000 கோடி டாலர்), ஐந்தாவது இடத்தை எகிப்து (2,400 கோடி டாலர்) ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் வெளிநாட்டில் பணியாற்றி தங்களது சொந்த நாடுகளுக்கு அனுப்பியுள்ளனர்’ என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வருடன் உலக வங்கியின் மேலாண்மை இயக்குநர் சந்திப்பு

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
World Bank Managing Director meeting with the Prime Minister

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை அவரது முகாம் அலுவலகத்தில், உலக வங்கியின் மேலாண்மை இயக்குநர் அன்னா ஜெர்டே உலக வங்கியின் உயர்மட்ட குழுவினருடன் இன்று (23.02.2024) சந்தித்துப் பேசினார். அப்போது அவர், தமிழ்நாடு அரசின் சார்பில் தாம்பரத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பணிபுரியும் பெண்களுக்கான குறைந்த வாடகையில், தரமான மற்றும் பாதுகாப்பான தங்கும் விடுதி திட்டமான தோழி விடுதியை பார்வையிட்டதாக கூறினார். மிகவும் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டத்திற்கு தனது பாராட்டினை தெரிவித்தார். அதோடு இத்திட்டம் உலக நாடுகளுக்கு ஒரு வழிகாட்டியான திட்டமாகும் என்று தெரிவித்தார்.

இச்சந்திப்பின்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டின் வேளாண் கடன் திட்டத்திற்கு 1971 ஆம் ஆண்டு ஒப்புதல் அளிக்கப்பட்டதிலிருந்து தமிழ்நாட்டிற்கும் உலக வங்கிக்கும் நீண்டகால உறவு இருப்பது குறித்து பேசினார். 1971 ஆம் ஆண்டிலிருந்து மாநிலத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், சமூக வளர்ச்சியை ஊக்குவிக்கவும், சமச்சீரான பொருளாதார வளர்ச்சியை அடையவும் உலக வங்கி பல வெற்றிகரமான ஒத்துழைப்புகளை அளித்துள்ளது. தற்போது, உலக வங்கி நிதியுதவியுடன் நடைமுறையுள்ள 8 திட்டங்கள் குறித்தும், மேலும் ஆலோசனை நடைபெற்றுவரும் 3 திட்டங்கள் குறித்தும் எடுத்துரைத்தார்.

இந்த அனைத்துத் திட்டங்களுக்கும் உலக வங்கியின் ஆதரவைத் தொடர்ந்து எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். மேலும், அவர்களது தமிழ்நாட்டுப் பயணம் பயனுள்ளதாக அமைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். இச்சந்திப்பின்போது தலைமைச் செயலாளர்  சிவ் தாஸ் மீனா, முதலமைச்சரின் கூடுதல் தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், நிதித்துறை முதன்மைச் செயலாளர் த. உதயச்சந்திரன் எனப் பலரும் உடன் இருந்தனர். 

Next Story

இந்தியாவில் 74% பேருக்கு ஆரோக்கியமான உணவு கிடைக்கவில்லை! - உலக வங்கி அதிர்ச்சி தகவல்

Published on 02/09/2023 | Edited on 02/09/2023

 

World Bank shock information about 74% of people in India do not have access to healthy food

 

நாட்டின் 77வது சுதந்திர தின விழாவில் பேசிய மோடி, “ உலக பொருளாதாரத்தில் 10வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. கூடிய விரைவில், 3வது இடத்தை அடைய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று கூறியிருந்தார். இந்த நிலையில், இந்தியாவில் உள்ள 74 சதவீத மக்களுக்கு ஆரோக்கியமான உணவு கிடைக்கவில்லை என்ற அதிர்ச்சி தகவலை உலக வங்கி வெளியிட்டுள்ளது. 

 

கடந்த 2021 ஆம் ஆண்டில், உலகத்தில் அனைத்து நாடுகளிலும் உள்ள மக்களின் ஆரோக்கியமான உணவுப் பட்டியலின் தரவுகள் திரட்டப்பட்டு உலக வங்கி இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில், 3 சதவீத மக்களுக்கு ஆரோக்கியமான உணவு கிடைக்கவில்லை என்ற தகவலுடன் ரஷ்யா முதல் இடத்தில் இருக்கிறது. நமது அண்டை நாடான பாகிஸ்தானில் 83 சதவீத மக்களுக்கு ஆரோக்கியமான உணவு கிடைக்கவில்லை என்ற தகவலுடன் கடைசி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதில், இந்தியாவில் உள்ள 74 சதவீத மக்களுக்கு ஆரோக்கியமான உணவு கிடைக்கவில்லை என்றும் உலக வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும், இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களில் ஆரோக்கியமான உணவுக்கான விலையும் அதிக அளவில் அதிகரித்துள்ளதாக இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக மும்பையில் மட்டும் கடந்த 5 ஆண்டுகளில் உணவுப் பொருள்களின் விலை சராசரியாக 65 சதவீதம் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. ஆனால், தனிமனித ஊதியம் மட்டும் 28 முதல் 35 சதவீதம் வரை மட்டுமே அதிகரித்துள்ளதாக உலக வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.