ஆப்கானிஸ்தானில் தாலிபான் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதில் இருந்தே, மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதிலும் குறிப்பாகப் பெண்களுக்கு எதிரான சட்டங்களில் அதீத கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. பெண்கள் படிக்கக்கூடாது, கட்டாயம் புர்கா அணிய வேண்டும், ஆண் துணையின்றி வெளியே செல்லக்கூடாது, திருமணமான எந்த பெண்ணுக்கும் விவகாரத்து கிடையாது, ஆண்கள் முகத்தில் தாடி வைத்துக்கொள்ள வேண்டும் எனப் பல்வேறு பழமைவாதச் சட்டங்களையும் அமல்படுத்தியுள்ளது.
இந்த சூழலலில் தாலிபான் அரசு மீண்டும் ஒரு சர்ச்சைக்குரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் ஆப்கானிஸ்தானில் பெண்கள் நர்சிங் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளைப் படிக்கக் கூடாது எனத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பெண்கள் மத்தியிலும் மேலும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
இந்த நிலையில், கற்றலின் முக்கியத்துவத்தை குர்ஆன் வலியுறுத்துகிறது என்று சுட்டிக்காட்டியுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷித் கான் தாலிபானின் உத்தரவிற்கு வருத்தம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “கற்றலின் முக்கியத்துவத்தை குர்ஆன் வலியுறுத்துகிறது. ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கான கல்வி மற்றும் மருத்துவ நிறுவனங்கள் அண்மையில் மூடப்பட்டதை ஆழ்ந்த வருத்தத்துடனும் ஏமாற்றத்துடனும் பார்க்கிறேன்.
இந்த முடிவு பெண்களின் எதிர்காலத்தை மட்டுமல்ல, நமது சமூகத்தின் கட்டமைப்பையும் கடுமையாகப் பாதித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் பெண் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் கடுமையான பற்றாக்குறை பெண்களின் உடல்நலம் மற்றும் கண்ணியத்தை நேரடியாக பாதிக்கிறது. ஆதலால் இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று நான் மனப்பூர்வமாக வேண்டுகோள் விடுக்கிறேன்.
ஆப்கானிஸ்தான் பெண்கள் தங்களது கல்வி உரிமையை மீட்டெடுத்து நாட்டின் வளர்ச்சிக்குப் பங்களிக்க முடியும். அனைவருக்கும் கல்வியை வழங்குவது ஒரு சமூகப் பொறுப்பு மட்டுமல்ல. அது நமது தார்மீகக் கடமை” எனக் குறிப்பிட்டுள்ளார்.