Joy Andrew

Advertisment

நாஜி சதி, விமான விபத்து, புற்றுநோய், கரோனா எனப் பல்வேறு இடர்பாடுகளை தன் வாழ்வில் எதிர்கொண்ட ஜாய் ஆண்ட்ரூ என்ற பிரிட்டிஷ் பெண்மணி 100 வயதை எட்டினார்.

1920-ம் ஆண்டு லண்டனில் பிறந்த ஜாய் ஆண்ட்ரூ, இரண்டாம் உலகப்போரின் போது பிரிட்டிஷ் துணை விமானப்படையில் பணியாற்றினார். இவர் தன்னுடைய வாழ்நாளில் தன்னைக் கொலை செய்வதற்காக நாஜி மேற்கொண்ட சதி, பயணித்த விமானம் சந்தித்த விபத்து, புற்றுநோய் பாதிப்பு, சமீபத்திய கரோனா பாதிப்பு என அனைத்திலிருந்தும் வெற்றிகரமாக மீண்டு வந்துள்ளார்.

Advertisment

தன்னுடைய 100 வயதை எட்டியுள்ள ஜாய் ஆண்ட்ரூ குறித்து அவரது மகளான 57 வயது நிரம்பிய மைக்கேல் ஆண்ட்ரூ பேசுகையில், "எனது அம்மா அற்புதமான மற்றும் வண்ணமயமான வாழ்க்கையை வாழ்ந்துள்ளார். இந்த 100 வயது என்பது அவருடைய சாதனைகளில் ஒன்றாக தற்போது இணைந்துள்ளது" எனக் கூறினார்.

நாஜி சதி குறித்துப் பேசிய மைக்கேல் ஆண்ட்ரூ, "ஜெர்மனியில் என் அம்மாவின் கார் டிரைவராக ஒருவர் பணியாற்றினார். ஒருநாள் பயணத்தின்போது வேண்டுமென்று காரை ஒரு இடத்தில் மோதச் செய்து அம்மாவை கொலை செய்ய நினைத்தார். அந்தத் தழும்பு கூட அவரது முகத்தில் இன்னும் இருக்கும். இதனையடுத்து, அந்த டிரைவர் கைது செய்யப்பட்டார். பின் அவர் நாசி எனத் தெரியவந்தது" என்றார்.

இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் விமானப்பணிப் பெண்ணாக பணியாற்றி வந்தார் ஜாய் ஆண்ட்ரூ. இவர் பயணித்த விமானம் எரிபொருள் குறைபாடு காரணமாக விபத்தைச் சந்திக்க அதில் இருந்தும் உயிர் தப்பியுள்ளார். 1970-ம் ஆண்டு மார்பக புற்றுநோய் பாதிப்பில் இருந்தும் மீண்டு வந்துள்ளார். மேலும், கடந்த மே மாதம் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஜாய் ஆண்ட்ரூ, தற்போது அதிலிருந்தும் பூரண குணமடைந்துள்ளார்.

இதுபோல, உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்து பலமுறை மீண்டு, 100 வயதை எட்டிய ஜாய் ஆண்ட்ரூவிற்கு பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.