Will Prime Minister Modi boycott the G-7 summit in Canada?

வளர்ந்த பொருளாதார நாடுகளாகக் கருதப்படும் ஏழு நாடுகளின் கூட்டமைப்பு ஜி-7 கூட்டமைப்பு என அழைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் இந்த நாடுகளுக்கு இடையேயான கூட்டங்களில் பொருளாதார முன்னேற்றம், வணிகம் சார்ந்த பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். இந்த கூட்டமைப்பில் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளது.

வருடத்திற்கு ஒரு முறை நடக்கும் ஜி-7 மாநாடு, இந்தாண்டு கனடாவில் வரும் ஜூன் 15ஆம் தேதி 17ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

Advertisment

இந்த மாநாடு தொடர்பாக கனடா தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ அழைப்பு வராத நிலையில், இந்த மாநாட்டை பிரதமர் மோடி புறக்கணித்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஜி-7 கூட்டமைப்பில் உறுப்பினராக இல்லாத போதிலும், இந்தியா கடந்த சில ஆண்டுகளாக சிறப்பு அழைப்பாளராக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

காலிஸ்தான் பயங்கரவாதிகள் தங்களுக்கென்று ஒரு தனி நாடு வேண்டும் என்று பல வருடங்களாக வலியுறுத்தி வருகின்றனர். இதில் இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் வாழும் காலிஸ்தான் பயங்கரவாதிகள் காலிஸ்தானுக்கான கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர். இதில், கனடாவில் வாழும் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்பவர் தலைமையில் காலிஸ்தான் கோரிக்கை வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இவர் கடந்த 2023ஆம் ஆண்டு மர்மநபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இவரது படுகொலைக்கு, இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ தொடர்ந்து குற்றச்சாட்டு வைக்க, அதற்கு இந்தியா மறுத்து கடும் கண்டனம் தெரிவித்தது. இதனால் இந்தியா - கனடா இடையிலான உறவில் சிக்கல் ஏற்பட்டது.

அதன் பின்னர், கடந்த ஜனவரி தனது பிரதமர் பதவியை ஜஸ்டீன் ராஜினாமா செய்தார். அதன் பிறகு, நடைபெற்ற தேர்தலில் மார்க் கார்னி கனடா பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கனடாவில் புதிய அரசு அமைந்திருந்தாலும், அங்குள்ள காலிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவுக்கு எதிராக இருப்பதால் பிரதமர் மோடி ஜி-7 மாநாட்டைப் புறக்கணித்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.