“We were intimidated by the Modi government” – ex-CEO of Twitter

Advertisment

மத்திய அரசு 2020 ஆம் ஆண்டு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய விவசாயிகள் ஒரு வருடமாக டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தினர். பல்வேறு கட்ட போராட்டங்களுக்குப் பிறகு 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாகப் பிரதமர் மோடி அறிவித்தார். இந்தியா மட்டுமின்றி விவசாயிகளின் இந்தப் போராட்டம் உலகம் முழுக்க கவனம் பெற்றது. இந்தப் போராட்டம் தொடர்பாக விவசாயிகளுக்கு ஆதரவாக ட்விட்டரில் அதிகளவில் கருத்துகள் பகிரப்பட்டு, உலக அளவில் டிரெண்ட் செய்யப்பட்டன. இது உலக நாடுகளில் இந்திய அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், விவசாயிகளின் போராட்டத்தின் போது இந்திய அரசால் ட்விட்டர் நிறுவனம் மிரட்டப்பட்டது என ட்விட்டர் நிறுவனத்தின் இணை நிறுவனரும், முன்னாள் தலைமைச் செயல் அதிகாரியுமான ஜாக் டோர்ச் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தஜாக் டோர்ச் இந்தக் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். அந்தப் பேட்டியில், ‘ட்விட்டர் நிறுவனம், வெளிநாட்டு அரசு தரப்பிலிருந்து ஏதேனும் அழுத்தங்களை மேற்கொண்டுள்ளதா’ எனக் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த ஜாக் டோர்ச், “இந்தியாவில் விவசாயிகள் போராட்டம் நடத்தியபோது, அது தொடர்பான பதிவுகளை வெளியிடும் ட்விட்டர் கணக்குகளை முடக்க வேண்டும் என இந்திய அரசால் நாங்கள் மிரட்டப்பட்டோம். ட்விட்டரை இந்தியாவில் கட்டுப்படுத்துவோம் என எச்சரிக்கை விடப்பட்டது.

Advertisment

இந்தியாவில் ட்விட்டர் அலுவலகங்கள் மூடப்படும் என்றும்ட்விட்டர் ஊழியர்களின் வீடுகளில் ரெய்டு நடக்கும் என்றும் மிரட்டப்பட்டது. அதுபோல், சில ஊழியர்களின் வீடுகளில் ரெய்டும் நடந்தன. இவை எல்லாம் ஜனநாயக நாடான இந்தியாவில் நடந்தது” என்று தெரிவித்துள்ளார். இது இந்திய அரசியலில் தற்போது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.