“We support Palestine” – Chief Minister Pinarayi Vijayan

Advertisment

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே 3 வாரத்திற்கும் மேலாகப் போர் நடைபெற்று வரும் நிலையில், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இப்படியாக இரு தரப்பிலிருந்து ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனிடையே காசாவை சுற்றி வளைத்து தனது பீரங்கி குண்டுகளால் காசா நகரையே இஸ்ரேல் நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது.

தரைவழித் தாக்குதலைத் தீவிரப்படுத்திய இஸ்ரேல் கிட்டத்தட்ட அனைத்து தொலைத் தொடர்பு சேவைகளை அழித்து உலகத்தில் இருந்து காசாவை தனிமைப்படுத்தியுள்ளது. ஹமாஸ் அமைப்பினரை ஒருவர் விடாமல் அழிக்க நினைக்கும் இஸ்ரேலின் தாக்குதலில் ஆயிரக்கணக்கான அப்பாவி பாலஸ்தீன மக்கள் தினந்தோறும் கொல்லப்பட்டு வருகின்றனர். அதில் 60 சதவீதம் பேர் பெண்களும், குழந்தைகளும் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில் இதுவரை 10 ஆயிரத்து 22 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 25 ஆயிரத்து 408 பேர் காயமடைந்துள்ளதாக காசாவின் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் உணவு பற்றாக்குறையை ஏற்படுத்துவதற்காக பேக்கரிகளும், சோலார் பேனல்கள் மற்றும் தண்ணீர் தேக்க தொட்டிகளும் குறி வைத்து தாக்கப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

Advertisment

போர் துவங்கிய நிலையில் இந்திய பிரதமர், “கடினமான நேரத்தில் இஸ்ரேலுக்கு இந்தியா துணை நிற்கும்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன், “இஸ்ரேலுடனான ராணுவ, பாதுகாப்பு ஒப்பந்தங்களை இந்தியா நிறுத்த வேண்டும். இஸ்ரேலை ஆதரிக்கும் பா.ஜ.க.வின் கொள்கையை இந்தியாவின் நிலைப்பாடாக எண்ண வேண்டாம். நாங்கள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.