ADVERTISEMENT

ஆப்கான் தொடர்பாக இந்தியாவின் கூட்டம்; பங்கேற்ற நாடுகள் இது குறித்தும் சிந்திக்க வேண்டும் - தலிபான் கருத்து!

06:15 PM Nov 12, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஆப்கானிஸ்தான் நாட்டைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள், அங்கு தங்கள் இடைக்கால ஆட்சியை நடத்திவருகின்றனர். இருப்பினும் இதுவரை தலிபான்களின் அரசை எந்த நாடும் அங்கீகரிக்கவில்லை. இந்தச் சூழலில் ஆப்கானிஸ்தானில் தாங்கள் செய்துள்ள முதலீடுகள் காரணமாக, அந்த நாட்டில் தலிபான்கள் ஆட்சி அமைத்துள்ளது குறித்து பல்வேறு உலக நாடுகள் கவலையடைந்துள்ளன. மேலும் இந்தியா உள்ளிட்ட நாடுகள், தலிபான்களால் தங்கள் பிராந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுமோ என கவலையடைந்துள்ளன.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் நிலை தொடர்பாக நேற்று (10.11.2021) இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையில் ரஷ்யா, ஈரான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்பு ஆலோசகர்களும், பாதுகாப்புத்துறை செயலாளர்களும் சந்தித்து விவாதித்தனர்.

இந்த கூட்டத்தில் ஆப்கானிஸ்தான் மக்களுக்குத் தடையற்ற உதவிகள் வழங்கப்பட வேண்டும், அந்தநாட்டில் அனைத்து பிரிவினரையும் உள்ளடக்கிய அரசு அமைய வேண்டும், ஆப்கானிஸ்தானை தீவிரவாதிகள் எந்த வகையிலும் பயன்படுத்தக் கூடாது என்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தநிலையில் இந்த கூட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தலிபான்கள், இந்த கூட்டம் தங்கள் நலனுக்கானதாக இருக்கும் என நம்புவதாக தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக தலிபான் செய்தித்தொடர்பாளர் ஜாபிஹுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளதாவது: இந்தியா இந்த பிராந்தியத்தில் முக்கியமான நாடு. இந்திய அரசோடு நல்ல இராஜதந்திர உறவுகளை விரும்புகிறோம். இஸ்லாமிய அமீரக ஆப்கானிஸ்தானின் கொள்கையின்படி, அதன் நிலம் வேறு எந்த நாட்டிற்கு எதிராகவும் பயன்படுத்தப்படாது. நாங்கள் பரஸ்பர ஒத்துழைப்பை விரும்புகிறோம்.

(இந்தியா நடத்திய) இந்த மாநாட்டில் நாங்கள் பங்கேற்கவில்லை என்றாலும், முழு பிராந்தியமும் தற்போதைய ஆப்கானிஸ்தானின் நிலைமையைக் கருத்தில் கொண்டிருப்பதால், இந்த மாநாடு ஆப்கானிஸ்தானின் நலனுக்கானதாக இருக்கும் என உறுதியாக நம்புகிறோம். மாநாட்டில் பங்கேற்ற நாடுகள். ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு நிலைமையை மேம்படுத்துவதற்கும், அந்த நிலையை பாதுகாப்பது குறித்தும் சிந்திக்க வேண்டும், மேலும் தற்போதைய அரசாங்கத்திற்கு நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய உதவ வேண்டும்.

இவ்வாறு ஜாபிஹுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT