Skip to main content

ஸ்கூட்டியில் கைப்பற்றப்பட்ட வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டவை... வேளச்சேரிக்கு மறு வாக்குப்பதிவா?

Published on 09/04/2021 | Edited on 09/04/2021

 

Votes recorded by the voting machine seized in Scooty ... re vote for Velacherry?

 

கடந்த 6ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. அன்று இரவு, வேளச்சேரியில் (நந்தினி மருத்துவமனை அருகில்) 3 வாக்குப்பதிவு இயந்திரங்களை ஸ்கூட்டரில் தூக்கிச் சென்ற நபர்களை மடக்கிப்பிடித்த பொதுமக்கள், அவர்களை போலீசாரிடம் ஒப்படைத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சம்பந்தப்பட்ட நபர்களை பொதுமக்களிடம் இருந்து மீட்டு விசாரித்தனர். அதில் வாக்கு இயந்திரங்களைக் கொண்டு சென்றது மாநகராட்சி ஊழியர்கள் என்பது தெரியவந்தது.

 

இந்த சம்பவத்தால் வேளச்சேரியில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என வேளச்சேரி காங்கிரஸ் வேட்பாளர் அசன் மவுலானா வலியுறுத்தியுள்ள நிலையில், ஸ்கூட்டரில் தூக்கிச் செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த தகவலை தேர்தல் அதிகாரி வெளியிட்டார். ஸ்கூட்டரில் எடுத்துச் செல்லப்பட்டது தேர்தல் வாக்குப்பதிவுக்குப் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரம் அல்ல. பழுதான 2 விவி பேட் இயந்திரங்களும், 2 மாற்று இயந்திரங்களும்தான் ஸ்கூட்டரில் எடுத்துச் செல்லப்பட்டதாக தேர்தல் அதிகாரி பிரகாஷ் அறிக்கையில் விளக்கமளித்திருந்த நிலையில், சம்மந்தப்பட்ட அந்த மாநகராட்சி ஊழியர்களான மெட்ரோ குடிநீர் உதவிப்பொறியாளர் செந்தில்குமார், மேஸ்திரி வேளாங்கண்ணி, ஊழியர்கள் துளசிங்கம், வெங்கடேசன் ஆகிய நான்கு பேரும் நேரில் ஆஜராகும்படி வேளச்சேரி போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர்.

 

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பான விசாரணையில், தற்போது புது தகவலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. ஸ்கூட்டரில் கைப்பற்றப்பட்ட அந்த வாக்கு இயந்திரத்தில், 15 வாக்குகள் பதிவாகியுள்ளன. அதற்கு ஆதாரமாக விவி பேட் இயந்திரத்தில் 15 வாக்கு ஒப்புகை சீட்டுகள் இருந்ததும் தெரியவந்துள்ளது. சுமார் 50 நிமிடம் அந்த வாக்கு இயந்திரம் வாக்குப்பதிவு மையத்தில் பயன்பாட்டில் இருந்த நிலையில், பழுது ஏற்பட்டதால் இயந்திரம் மாற்றப்பட்டது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனால் வேளச்சேரியில் மறுவாக்குப்பதிவு நடைபெறுவது குறித்து தலைமை தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யா பிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்