ADVERTISEMENT

கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாருக்கு அமெரிக்காவில் பிறந்தநாள் விழா...

01:10 PM Sep 11, 2018 | prasathpandian

ADVERTISEMENT

அமெரிக்காவின் முதல் மாநிலமாம் டெலவரில் செப்டம்பர் 8 அன்று "கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார்" அவர்களின் 146வது பிறந்தநாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. நண்பகல் 12:00 மணியளவில் தொடங்கிய விழாவில் டெலவர், பென்சிலவேனியா மற்றும் நியூ செர்சியைச் சேர்ந்த தமிழ் மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.

ADVERTISEMENT

தமிழ்த்தாய் வாழ்த்துடன் இனிதே தொடங்கியது இவ்விழா. திரு.தங்கம் வையாபுரி வரவேற்புரை வழங்கினார். தொடர்ந்து சிறுவர்களுக்கான ஓவியப்போட்டி இருபிரிவாக நடைபெற்றது. 7 வயதுக்கு உட்பட்டவர்கள் ஒரு பிரிவாகவும், 8 வயது முதல் 11 வயதுக்கு உட்பட்டவர்கள் ஒரு பிரிவாகவும் கலந்து கொண்டு வ.உ.சி. அவர்களின் படத்தை வரைந்து அசத்தினார்கள்.

சிறுவர்களுக்கான வினாடி, வினா போட்டியில் நான்கு குழுவினர் கலந்து கொண்டு அனைத்து கேள்விகளுக்கும் பதில் கூறி நடுவர்களையே கலங்கடித்தனர். 5 சுற்றில் முடிய வேண்டிய போட்டி 16 வது சுற்றில் முடிவடைந்தது. அதுவே, அமெரிக்க வாழ் தமிழ்க் குழந்தைகள் எந்த அளவிற்கு ஆர்வத்துடன் வ.உ.சி-யைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்பி, கேள்வி பதில்களைப் புரிந்து, உள்வாங்கி படித்து வந்தனர் என்பதற்கு சாட்சி.

பின்னர் பெரியவர்களுக்காக நடந்த பேச்சுப்போட்டியில் பலர் கலந்து கொண்டு "வ.உ.சி-யை நாம் ஏன் போற்ற வேண்டும்?" என்ற தலைப்பில் உரையாற்றினர். அதில் முதல் பரிசை தட்டிச்சென்றார் திரு.செல்வகுமார் வேலு. திருமதி. ரமா ஆறுமுகம் மற்றும் திருமதி. பாரதிக் கண்ணன் அருமையாகப் பேசி இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசை பெற்றுச்சென்றனர்.

விழாக்குழுவில் ஒருவரான திரு.பிரசாத் பாண்டியன் விழாவினை சிறப்பாகத் தொகுத்து வழங்கினார். இடையிடையே வ.உ.சி-யின் வரலாற்றுச் செய்திகளையும், அவரைப் பற்றிய பல சுவையான செய்திகளையும் பகிர்ந்துக்கொண்டார்.

தமிழகத்திலிருந்து வந்திருந்த திரு.கோ.அரங்கநாதன் அவர்கள் விழாவில் தொடக்க உரையாற்றினார். அவர் உலகத் தமிழ்க்கழக மயிலாடுதுறை கிளைத்தலைவராக உள்ளார். அவர் வ.உ.சி-யின் தமிழ் பற்றை பற்றி இணையத்தில் அறியப்படாத பல தகவல்களையும், வ.உ.சி-யின் பல நற்குணங்களையும் வந்திருந்தோருக்கு எளிமையாக எடுத்துக் கூறினார்.

விழாவின் சிறப்பு விருந்தினராக திரு. மகேந்திரன் பெரியசாமி உரையாற்றினார். திரு. மகேந்திரன் கெண்டக்கி மாகாண கவர்னர் விருது பெற்றவரும், வாஷிங்டனில் இயங்கி வரும் எனெர்ஜில் கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தினன் நிறுவனரும், தலைமைச் செயலூக்க அதிகாரியும் ஆவார். அவர் "வ.உ.சிதம்பரனார் விடுதலை போராட்டத்தில் அடைந்த இன்னல்களை விவரித்து கூறினார். பிற விடுதலைப் போராட்டத் தலைவர்கள் அரசியல் விடுதலை மட்டுமே கோரிய காலத்தில் பொருளாதார விடுதலைக் கொள்கையை முன்னெடுத்தவர் எனவும், தென்னகத்தின் அடையாளமாக இந்தியா முழுவதும் புகழ் அடைந்தவர்" எனவும் வ,உ,சி-யின் திறமைகளையும், போராட்ட அணுகு முறைகளையும், பெருமைகளையும் அருமையாக விளக்கிப் பேசினார்.



அதன் பின் தூத்துக்குடியில் வாழும் வ.உ.சி-யின் உறவினாரான திரு.முருகேசன் அவர்கள் பதிந்து அனுப்பிய வாழ்த்தும், வ.உ.சி-யைப் பற்றிய அரிய செய்திகளையும் கொண்ட காணொளி பகிரப்பட்டது.

இவ்வினிய விழாவில் கப்பலோட்டிய தமிழன் படத்தில் வரும் பாரதியார் பாடலான "சிந்து நதியின் மிசை நிலவினிலே" என்கிற பாடலை சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஒய்வுபெற்ற ஆசிரியை திருமிகு. வசந்த கோகிலா அவர்கள் கணீர் குரலில் பாடி அசத்தினார்.

விழாக்குழுவில் ஒருவரான திரு.இராஜ்குமார் வ.உ.சி-யையும் தற்கால அரசியல் நிகழ்வுகளையும் ஒப்பிட்டுப் பேசினார். திரு.சல்மான் அவரகள் வ.உ.சி-யின் சாதி, மதம் கடந்த அவரது முற்போக்கு எண்ணங்களை விவரித்துப் பேசினார்.

பின்னர் போட்டியில் வெற்றி பெற்றோருக்கு ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ் சிறப்பு விருந்தினர்களால் வழங்கப்பட்டது.

இறுதியாக விழாக்குழுவில் ஒருவரான திரு.துரைக்கண்ணன் ஆற்றிய நன்றியுரையில் "வ.உ.சி-யை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்வதற்காக, இத்தகைய விழாக்களை நடத்துவதோடு மட்டுமல்லாமல், அவ்விழாக்களில் ஓவிய போட்டி மற்றும் வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டது" என்றார். விழாவினை ஒருங்கிணைக்க உதவிய நண்பர்களுக்கும், போட்டியில் பங்கேற்ற குழந்தைகள், அவர்களின் பெற்றோர்கள், பார்வையாளர்கள், சிறப்பு விருந்தினர்கள் என அனைவருக்கும் தனது உள்ளார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார். அத்துடன் விழா இனிதே நிறைவடைந்தது. விழாவில் பங்கேற்றவர்கள் தனித் தன்மை வாய்ந்த தமிழக விடுதலைப் போராளி வ.உ.சி பற்றிய பல அரிய செய்திகளை தெரிந்துகொண்ட மனநிறைவோடு சென்றதைக் காணமுடிந்தது.

வ.உ.சி. சில குறிப்புகள்:

1. ஒட்டப்பிடாரத்தில் செப்டம்பர் 05, 1872ம் ஆண்டு பிறந்தார்
2. வழக்கறிஞராக லஞ்சம் மற்றும் பொய் வழக்குகளுக்கு எதிராக வாதாடினார்.
3. கோரல் மில் தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வேலை நிறுத்தத்திற்கு தலைமை தாங்கினார்
4. இந்தியா பொருளாதார விடுதலை அடைவதற்கு இரண்டு கப்பல்களை மூலதனமாக கொண்டு வணிகம் புரிந்தார்.
5. பிரிட்டிஷ் அரசாங்கம் வ.உ.சி-க்கு இரண்டு ஆயுள் (40 ஆண்டுகள்) தண்டனை விதித்தது.
6. இந்திய சுதந்திரத்திற்காக செக்கிழுத்தார்
7. வ.உ.சி-க்கு தமிழ் பற்று அதிகம். அவருக்குப் பிடித்த நூல் திருக்குறள்.
8. வ.உ.சி சிறந்த எழுத்தாளர். அகமே புறம், காந்தி மார்க்கம், மெய்யறம், மெய்யறிவு, மனம் போல் வாழ்வு, வள்ளியம்மை சரித்திரம், சுயசரிதை என பல நூல்களை தமிழில் எழுதியுள்ளார்.
9. நவம்பர் 18, 1936-ல் காலமானார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT