US,UK incident on Yemen

மத்திய கிழக்கின் செங்கடல் வழியாக ஆப்பிரிக்கா, ஐரோப்பா நோக்கி பயணிக்கும் கப்பல்களுக்கு அடிக்கடி அச்சுறுத்தல்கள் ஏற்பட்டு வருகின்றன. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்க போர்க் கப்பல்கள் அந்த பகுதிக்கு வந்துள்ளதுதான் இதற்கான காரணம் எனக் கூறப்படுகிறது. ஏமன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மற்றும் பல்வேறு தீவிரவாத அமைப்புகளைச்சேர்ந்தவர்கள் ட்ரோன்களை பயன்படுத்தி கப்பல்களைத்தாக்குவது தொடர் கதையாகி வருகிறது.

Advertisment

இந்நிலையில் ஏமன் நாட்டின் மீது அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் தாக்குதல் நடத்தியுள்ளன. ஹவுதி கிளர்ச்சியாளர்களைக் குறிவைத்து இரு நாடுகளும் தாக்குதல் நடத்துவதால் பதற்றம் அதிகரித்துள்ளது. செங்கடல் பகுதியில் சரக்கு கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்துவதற்குப் பதிலடியாக இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி இயக்கம் ஏமனிலும் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisment

அந்த வகையில் ஏமன் நாட்டின் தலைநகரான சனா, அல் ஹுதைதா, சத்தா, தாமர் ஆகிய நகரங்களின் மீது அமெரிக்கா, இங்கிலாந்து வான்வழித்தாக்குதல் நடத்தியுள்ளது. விமானம் மற்றும் கடற்படைகள் மூலம் ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களின் ஆயுதக் கிடங்குகள் உள்ளிட்ட 12 மையங்களைக் குறிவைத்து இந்த தாக்குதல் நடைபெற்று வருகிறது. அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தின் இந்த தாக்குதலுக்கு 10க்கும் மேற்பட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. தேவைப்பட்டால் தாக்குதலை மேலும் தீவிரப்படுத்துவோம் எனவும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவின் இந்த தாக்குதலால் காசாவில் நடக்கும் போர் தீவிரமடையும் எனவும் அஞ்சப்படுகிறது.