Skip to main content

விண்வெளி ஆயுதத்தை ஏவி ரஷ்யா சோதனை...? அமெரிக்கா, இங்கிலாந்து குற்றச்சாட்டு...

Published on 24/07/2020 | Edited on 24/07/2020

 

usa about russia space weapon test

 

விண்வெளி சுற்றுப்பாதையில் செயற்கைக்கோள்களைக் குறிவைக்க பயன்படுத்தக்கூடிய விண்வெளி ஆயுத சோதனையை ரஷ்யா செய்ததாக அமெரிக்காவும், இங்கிலாந்தும் குற்றம் சாட்டியுள்ளன.

 

அமெரிக்கா, ரஷ்யா இடையே நீண்ட காலமாக நிலவி வரும் ஆயுதப்போட்டி தற்போது விண்வெளி வரை சென்றுள்ளது. விண்வெளியில் சுற்றிவரும் செயற்கைக்கோள்களைத் தாக்கும் சக்தி கொண்ட ஆயுதங்களை ரஷ்யா தயாரிப்பதாக அமெரிக்கா சமீப காலமாக குற்றம்சாட்டி வந்தது. இந்நிலையில், புதிய ரஷ்ய செயற்கைக்கோள் செயல்பாடு குறித்து அமெரிக்கா தற்போது புகார் தெரிவித்துள்ளது. மேலும், இதுவரை ரஷ்யாவின் இந்த செயல்பாடுகள் குறித்து எதுவும் கருத்து தெரிவிக்காத இங்கிலாந்தும் தற்போது ரஷ்யா மீது குற்றம் சுமத்தியுள்ளது. இதுகுறித்து புதிய அமெரிக்க விண்வெளிப் படையின் தலைவரான ஜெனரல் ஜான் ரேமண்ட் கூறுகையில், “ஜூலை 15 ஆம் தேதி இந்த சோதனை நடந்ததாக தெரிகிறது. விண்வெளி அடிப்படையிலான அமைப்புகளை அபிவிருத்தி செய்வதற்கும், சோதனை செய்வதற்கும் ரஷ்யாவின் தொடர்ச்சியான முயற்சிகளுக்கு அதிக சான்றுகள் உள்ளன. மேலும், அமெரிக்கா மற்றும் அதனுடன் தொடர்புடைய நாடுகளின் விண்வெளி சொத்துகளுக்கு ஆபத்து ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்" எனத் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“3ஆம் உலகப்போர் உருவாகும்...” - ரஷ்ய அதிபர் எச்சரிக்கை

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
 Russian president warns about World War 3

உக்ரைன் - ரஷ்யா இடையே, கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது.  இதில், உக்ரைனை நிலம், நீர் உள்ளிட்ட பகுதிகளில் சூழ்ந்து கொண்டு மீண்டும் ரஷ்யா தீவிர தாக்குதலை தொடுத்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகள் முயன்றும், போர் நின்றபாடில்லை. அதே வேளையில், உக்ரைனுக்கு அமெரிக்கா தொடர்ந்து போர் ஆயுதங்களை வழங்கி வருவதாக ரஷ்யா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இந்த நிலையில், மூன்றாம் உலகப் போர் உருவாகும் சூழல் வரும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரஷ்யாவில் 6 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு முறை அதிபர் தேர்தல் நடத்தப்படுகிறது. அந்த வகையில், ரஷ்ய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், கடந்த மார்ச் 15ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்தலில், ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி, தேசிய சுதந்திர ஜனநாயகக் கட்சி, புதிய மக்கள் கட்சி ஆகியவை களம் கண்டன. ரஷ்ய வரலாற்றில் முதல்முறையாக நடைபெற்ற 3 நாட்கள் வாக்குப்பதிவில், 3வது முறையாக அதிபர் தேர்தலில் புதின் மாபெரும் வெற்றி பெற்றுள்ளார். ஸ்டாலினுக்கு பிறகு தொடர்ச்சியாக 3வது முறையாக வெற்றி பெற்ற புதின், 200 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஒரு சாதனையை படைத்துள்ளார். 

அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும், புதின் பேசியதாவது, “அமெரிக்க தலைமையிலான நேட்டோ படைகளும், ரஷ்யாவும் நேருக்கு நேர் மோதிக்கொள்வது என்பது முழு அளவிலான மூன்றாம் உலகப் போரை நோக்கி ஒரு படி தொலைவில் இருக்கும் என அர்த்தம். இது அனைவருக்கும் தெளிவாகத் தெரிகிறது. ஆனால், அத்தகைய சூழலை யாரும் விரும்பவில்லை. அதே நேரத்தில், இந்த நவீன உலகில் எல்லாம் சாத்தியமே. உக்ரைனில் ஏற்கனவே, நேட்டோ இராணுவ வீரர்கள் உள்ளனர். அவர்களில் ஆங்கிலம் பேசும் வீரர்களும், பிரஞ்சு பேசும் வீரர்களும் உள்ளனர். அவர்கள் அங்கு அதிக எண்ணிக்கையில் இறந்து கொண்டிருக்கிறார்கள். சம்பந்தப்பட்ட நாடுகள் தங்கள் வீரர்களை திரும்பப் பெறுவது நலம்” என்று கூறினார். 

முன்னதாக தேர்தல் பரப்புரையின் போது, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், அங்குள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “இங்கே எல்லாம் அணுசக்தி மோதல் வருவதாக நான் நினைக்கவில்லை. உக்ரைன் மீதும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. உக்ரைனுடனான பேச்சுவார்த்தைகளுக்கு ரஷ்யா தயாராக உள்ளது. ஆனால், அவை யதார்த்தத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். அதே வேளையில், ராணுவ தொழில்நுட்பக் கண்ணோட்டத்தில் சிந்தித்தால், நாங்கள் நிச்சயமாக தயாராக இருக்கிறோம். 

அணு ஆயுத போரைத் தூண்டும் வகையில் எந்த ஒரு செயலிலும் அமெரிக்கா ஈடுபடாது என்று நம்புகிறோம். மேலும், அமெரிக்கா தனது ராணுவப் படைகளை ரஷ்ய எல்லையில் அல்லது உக்ரைனுக்கு அனுப்பினால், ரஷ்யா இந்த நடவடிக்கையில் ஈடுபடும் என்பதை அமெரிக்கா புரிந்து கொள்ளும். ஒருவேளை, அமெரிக்கா ஆணு ஆயுத சோதனை நடத்தினால், அதற்கு நாங்களும் தயாராக இருக்கிறோம்” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

‘புரிதல் இல்லாதவர்கள் பேசாமல் இருப்பது நல்லது’ - அமெரிக்காவுக்கு இந்தியா பதிலடி

Published on 15/03/2024 | Edited on 15/03/2024
India's response to America for CAA

பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசால் கடந்த 2019 ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டம் (C.A.A.) கொண்டுவரப்பட்டது. அதில் கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்னர் இந்தியா வந்தடைந்த வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர் அல்லாதோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு புதிய சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தது. இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. பெரிய அளவில் போராட்டங்களும் நடைபெற்றன.

அதாவது இந்த சட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க சி.ஏ.ஏ. வகை செய்கிறது. அதே சமயம் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறும் இஸ்லாமிய மக்களுக்கு குடியுரிமை வழங்க வழிவகை செய்யப்படவில்லை. மேலும் தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கவும் சிஏஏ சட்டத்தில் வழிவகை செய்யப்படாததும் குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் இந்த சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கி இருந்தார். இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம் நேற்று முன்தினம் முதல் (11.03.2024) அமலுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டது. 

மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு, பல்வேறு எதிர்க்கட்சிகள், தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. அந்த வகையில், கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயனும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் தங்கள் மாநிலத்தில் சி.ஏ.ஏ சட்டம் அமல்படுத்தப்பட மாட்டாது என்று கூறி மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். இதற்கிடையில், சி.ஏ.ஏ சட்டத்தை ரத்து செய்வதில் சாத்தியம் இல்லை எனவும், அந்த சட்டத்தை நிறுத்தும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு இல்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக கூறியிருந்தார். 
 

India's response to America for CAA

இதனைத் தொடர்ந்து, மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் சி.ஏ.ஏ சட்டத்திற்கு கவலை தெரிவிப்பதாக அமெரிக்கா கூறியது. இது குறித்து அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறுகையில், “குடியுரிமை திருத்தச் சட்டத்தின் அறிவிப்பு குறித்து விவரங்களை கடந்த 11 ஆம்  தேதி இந்தியா வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு எங்களுக்கு கவலையளிக்கிறது. இந்த சட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பதை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். மத சுதந்திரத்திற்கான மரியாதை அளித்தல் மற்றும் அனைத்து சமூகங்களையும் சட்டத்தின் கீழ் சமமாக நடத்தப்படுவது தான் அடிப்படை ஜனநாயகக் கோட்பாடுகள்” என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், இந்த விமர்சனத்துக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது. இது குறித்து வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், “குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது இந்தியாவின் உள்விவகாரம். சி.ஏ.ஏ என்பது குடியுரிமை வழங்குவது; குடியுரிமையைப் பறிப்பது அல்ல. எனவே இது அடிக்கோடிட்டுக் காட்டப்பட வேண்டும். இந்த சட்டம் நாடற்ற தன்மையின் பிரச்சினையைக் குறிக்கிறது. மனித கண்ணியத்தை வழங்குகிறது மற்றும் மனித உரிமைகளை ஆதரிக்கிறது. சி.ஏ.ஏ சட்டம் குறித்த அமெரிக்க வெளியுறவுத்துறையின் கருத்துக்கள் தவறானவை மற்றும் தேவையற்றவை என்று நாங்கள் கருதுகிறோம். டிசம்பர் 31, 2014 அன்று அல்லது அதற்கு முன் இந்தியாவுக்குள் நுழைந்த ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசத்தைச் சேர்ந்த இந்து, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் கிறிஸ்தவ சமூகங்களைச் சேர்ந்த துன்புறுத்தப்பட்ட சிறுபான்மையினருக்கு இந்த சட்டம் பாதுகாப்பான புகலிடத்தை வழங்குகிறது.

India's response to America for CAA

துன்பத்தில் இருப்பவர்களுக்கு உதவும் ஒரு பாராட்டத்தக்க முயற்சியை வாக்கு வங்கி அரசியல் நோக்கில் மட்டும் பார்க்கக் கூடாது. இந்தியாவின் பன்மைத்துவ மரபுகள் மற்றும் பிராந்தியத்தின் பிரிவினைக்குப் பிந்தைய வரலாறு ஆகியவை குறித்து சரியான புரிதல் இல்லாதவர்கள் பேசாமல் இருப்பது நல்லது. இந்தியாவின் நலம் விரும்பிகள் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்ட நோக்கத்தை வரவேற்க வேண்டும்” என்று தெரிவித்தார்.