‘விதிகளை மீறினால் விசா ரத்து செய்யப்படும்’ - இந்திய மாணவர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

US warns Indian students as Visa will be cancelled if rules are violated

தரமான பல்கலைக்கழகங்களில் பி.எச்.டி போன்ற உயர்கல்வி படிக்க விரும்பும் இந்திய மாணவர்கள் பலருக்கும், அமெரிக்கா ஒரு முக்கிய தேர்வாக இருந்து வருகிறது. வெளிநாட்டு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் பிற செலவுகளுக்கு மாதாந்திர தொகையும் அமெரிக்கா பல்கலைக்கழகங்கள் வழங்குவதால் இந்திய மாணவர்கள் ஆண்டுதோறும் அமெரிக்காவுக்குச் சென்று படித்து வருகின்றனர். பட்டப்படிப்புக்குப் பிறகு வேலைவாய்ப்புகளும் அங்கு அதிகமாக உள்ளதால் அங்கேயே தங்கி வேலையும் பார்த்து வருகின்றனர். கடந்த 2024ஆம் ஆண்டில் 2 லட்சத்திற்கு அதிகமான இந்திய மாணவர்கள் அமெரிக்காவுக்குச் சென்றுள்ளனர் என்று தகவல் வெளியானது.

இந்த நிலையில், அமெரிக்காவில் படிக்கும் இந்திய மற்றும் பிற வெளிநாட்டு மாணவர்கள் கல்வி நிலையங்களில் உரிய தகவல் அளிக்காமல் வகுப்புகளைத் தவிர்த்தால் அவர்களின் விசா ரத்து செய்யப்படும் என அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வெளிநாட்டு மாணவர்கள், படிப்பை பாதியில் நிறுத்தினாலோ அல்லது, வகுப்புகளைத் தவிர்த்தாலோ அல்லது உங்கள் கல்வி நிலையங்களில் உரிய தகவல் அளிக்காமல் இடைநிற்றாலோ, அவர்களின் மாணவர் விசா ரத்து செய்யப்படலாம். மேலும் எதிர்கால அமெரிக்க விசாக்களுக்கான தகுதியை இழக்க நேரிடும். இதனால் எதிர்காலத்தில் எந்த அமெரிக்க விசாவிற்கும் விண்ணப்பிக்க முடியாமல் போகலாம். எந்தவொரு பிரச்சினையையும் தவிர்க்க எப்போதும் உங்கள் விசாவின் விதிமுறைகளைக் கடைப்பிடித்து, உங்கள் மாணவர் நிலையைப் பராமரிக்கவும்’ எனத் தெரிவித்துள்ளது.

America indian students visa
இதையும் படியுங்கள்
Subscribe