US President Joe Biden about donald trump

Advertisment

சமீபத்தில் நடந்து முடிந்த அமெரிக்கா அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கமலா ஹாரிஸை வீழ்த்தி, குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்று அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் 47வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டிரம்ப், வருகிற ஜனவரி 20ஆம் தேதி அமெரிக்கா அதிபராக பதவியேற்கவுள்ளார். அதிபராக பதவியேற்ற பின்னர் என்னென்ன மாற்றங்கள் மற்றும் திட்டங்கள் செய்யப்படும் என்று தேர்தலில் வெற்றி பெற்றதில் இருந்து ஒவ்வொரு நாளும் டொனால்ட் டிரம்ப் அறிவித்து வருகிறார்.

இந்த நிலையில், தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்தார். அதில் அவர் பேசியிருப்பதாவது, “இதுவரை, மிகவும் நன்றாக இருக்கிறது. ஆனால் எனக்கு 86 வயதாகும்போது நான் என்னவாகப் போகிறேன் என்று யாருக்குத் தெரியும். டிரம்பிற்கு எதிரான வாக்கெடுப்பின் அடிப்படையில் நான் வெற்றி பெற்றிருப்பேன் என்று நம்புகிறேன். டிரம்ப் மீண்டும் தேர்தலில் போட்டியிடும் போது, ​​அவரை தோற்கடிக்க எனக்கு சிறந்த வாய்ப்பு இருப்பதாக நான் நினைத்தேன். ஆனால் எனக்கு, 86 வயதாகும் நிலையில், நான் மீண்டும் அதிபராக இருக்க விரும்பவில்லை” என்று கூறினார்.

கடந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடனும், அவரை எதிர்த்து குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவரும், முன்னாள் அதிபருமான டொனால்ட் டிரம்ப் போட்டியிடுவதாக இருந்தது. ஆனால், அதிபர் தேர்தலிலிருந்து ஜோ பைடன் விலக, ஜனநாயகக் கட்சி சார்பாக தற்போதைய துணை அதிபரும், ஆப்ரிக்க - இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.