Union Minister Jaishankar says We don't need the UN to tell us

Advertisment

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது . இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

அதே வேளையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது, ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த சோரன் கைது, காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு ஆகியவற்றை குறித்து அமெரிக்கா மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகள், இந்திய அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தன. இதற்கு, இந்திய அரசு தரப்பில் கடும் கண்டனம் தெரிவித்தது மட்டுமல்லாமல், இந்தியா நாட்டின் உள்விவகாரங்களில் தலையிட்டதாகக் கூறி சம்பந்தப்பட்ட நாடுகளின் தூதர்களுக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பியது.

இந்த நிலையில், ஐ.நா சபை செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் சில தினங்களுக்கு முன்செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவரிடம், இந்தியாவில் நிலவி வரும் அரசியல் சூழல் தொடர்பாக செய்தியாளர்கள் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஸ்டீபன் டுஜாரிக், “இந்தியாவிலும், தேர்தல் நடைபெறும் எந்த நாட்டிலும், அரசியல் மற்றும் சமூக உரிமைகள் உட்பட அனைவரின் உரிமைகளும் பாதுகாக்கப்பட்டு, சுதந்திரமான மற்றும் நியாயமான சூழ்நிலையில் அனைவரும் வாக்களிக்க முடியும் என்று நாங்கள் மிகவும் நம்புகிறோம்” என்று கூறினார்.

Advertisment

இதற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக, செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், “எங்களுடைய தேர்தல்கள் சுதந்திரமாகவும், நியாயமாகவும் இருக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை எங்களுக்கு சொல்ல தேவையில்லை. எங்களிடம் இந்திய மக்கள் உள்ளனர். இந்திய மக்கள் தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறுவதை உறுதி செய்வார்கள். எனவே, அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம்” என்று கூறினார்.