UN, US accused on Bangladesh General Election

வங்காள தேசத்தில், பங்களாதேஷ் அவாமி லீக் கட்சி சார்பில் ஷேக் ஹசீனா 15 வருடங்களாகப் பிரதமராகப் பொறுப்பு வகித்து வருகிறார். பிரதமர் ஷேக் ஹசீனா மீது ஊழல் மற்றும் மனித உரிமை மீறல் போன்ற குற்றச்சாட்டுகள் அவ்வப்போது எழுந்து வந்தன. அதனால், வங்கதேச தேசியக் கழகம் மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமி ஆகிய இரு பிரதான எதிர்க்கட்சிகள், பிரதமர் உடனடியாக பதவி விலகவும், ஆளும் ஆட்சி கலைக்கப்பட்டுத் தேர்தல் முடியும் வரை கட்சி சார்பற்ற அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தன.

Advertisment

இதையடுத்து, முக்கிய எதிர்க்கட்சியான வங்கதேச தேசியக் கழகம் நாடு தழுவிய போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. மேலும், இந்தத் தேர்தலை புறக்கணிப்பதாகவும் அக்கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான கலீதா ஜியா அறிவித்தார். இதனால் சட்டம், ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாகக் கருதி கலீதா வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தி வந்தனர்.

Advertisment

இந்த நிலையில், அந்நாட்டில் பாராளுமன்றத் தேர்தல் கடந்த 7 ஆம் தேதி விறுவிறுப்பாக நடைபெற்றது. எதிர்க்கட்சிகள் தேர்தலைப் புறக்கணித்த நிலையில், பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்றது. 350 தொகுதிகள் கொண்ட வங்காள தேசத்தில் 50 தொகுதிகளுக்கு அரசாங்கத்தால் பெண் எம்.பி.க்கள் நியமிக்கப்படுவர். எனவே, 300 தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெறும். ஆனால், ஒரு வேட்பாளர் இறந்ததால் மீதமுள்ள 299 தொகுதிகளுக்கு மட்டும் நேற்று முன்தினம் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 41.8 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

தேர்தல் முடிந்ததும்உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டு, எண்ணிக்கை முடிவுகள் நேற்று முன்தினம் (08-01-24) வெளியிடப்பட்டன. அதன்படி, தேர்தல் நடைபெற்ற 299 தொகுதிகளில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி 223 இடங்களில் கைப்பற்றி அபார வெற்றி பெற்றது. முக்கிய எதிர்க்கட்சியான ஜாதியா கட்சி 11 இடங்களை மட்டுமே கைப்பற்றி இருந்தது.

Advertisment

இதன் மூலம், ஷேக் ஹசீனா ஐந்தாவது முறையாக வங்காள தேச நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்க இருக்கிறார். கோபால் கஞ்ச் தொகுதியில் போட்டியிட்ட ஷேக் ஹசீனா, 8வது முறையாக எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம், இந்த குறைந்தபட்ச வாக்குப்பதிவே தங்களது தேர்தல் புறக்கணிப்புக்கு கிடைத்த வெற்றியாகும். எனவே, நியாயமற்ற முறையில் நடந்த இந்த தேர்தலை ரத்து செய்யக்கோரி எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில், வங்காள தேசத்தில் நடந்த பொதுத் தேர்தல் சுதந்திரமாக, நியாயமாக நடைபெறவில்லை. அனைத்து கட்சிகளும் பங்கு பெறாதது வருத்தமளிக்கிறது என்று அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. அதுமட்டுமல்லாமல், இந்த தேர்தல் குறித்து ஐ.நா மனித உரிமைகள் தலைவர் வோல்கர் டர்க், “புதிய அரசு ஜனநாயகம், மனித உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தலுக்கு முன்பு கடந்த ஆண்டு அக்டோபர் முதல் எதிர்க்கட்சி வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் என 25,000க்கு மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது வன்முறை கட்டவிழ்க்கப்பட்டு 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர். வன்முறையால் தேர்தல் சிதைக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து, “வங்கதேசத்தில் நடந்த 12வது பொதுத் தேர்தல் நம்பகமான, நியாயமான முறையில் நடைபெறவில்லை. அனைத்து கட்சிகளும் போட்டியிடாததால், மக்களுக்கு வேறு கட்சிகளுக்கு வாக்களிக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை” என்று இங்கிலாந்து குற்றம்சாட்டியுள்ளது.