UN condemnation for Attack on Gaza Hospital;

Advertisment

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே ஒரு வாரத்திற்கும் மேலாக போர் நடைபெற்று வரும் நிலையில், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. கடந்த 7 ஆம் தேதி காசாவில் இருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இப்படியாக இரு தரப்பிலிருந்து ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

இதனிடையே, பாலஸ்தீனத்தின் காசா நகரில் அமைந்துள்ள அல் அஹ்லி மருத்துவமனையில் நேற்று முன் தினம் இரவு மேற்கொள்ளப்பட்ட ஏவுகணை தாக்குதலில் சுமார் 500 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலை காசா சுகாதாரத்துறை அமைச்சகமும் உறுதி செய்துள்ளது. அதே சமயம் இந்த தாக்குதலுக்கு ஹமாஸ் அமைப்பு மற்றும் இஸ்ரேல் ராணுவம் ஒருவரை ஒருவர் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதனிடையே, காசா மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியதற்கு பல்வேறு நாடுகளில் இருந்து கண்டனம் தெரிவித்து வருகின்றன. அந்த வகையில், எகிப்து, ஜோர்டான், சவுதி அரேபியா, பக்ரைன் உள்ளிட்ட அரபு நாடுகள் வன்மையாக கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும், இந்த தாக்குதலுக்கு ஐ.நா மற்றும் அதன் மூத்த தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Advertisment

இந்த நிலையில், ஐ.நா பொது செயலர் அண்டோனியா குட்டரேஸ் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் கூறியதாவது, “காசா மருத்துவமனை மீதான தாக்குதலில் நூற்றுக்கணக்கான பாலஸ்தீன பொதுமக்கள் உயிரிழந்த செய்தி மிகவும் வேதனையளிக்கிறது. இந்த கொடூரமான தாக்குதலுக்கு நான் வன்மையாக கண்டிக்கிறேன். சர்வதேச மனிதாபிமான சட்டங்களின்படி மருத்துவமனைகளும், மருத்துவ பணியாளர்களும் பாதுகாக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.