ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர பல்வேறு நாடுகள் முயன்றும், போர் நின்றபாடில்லை. அதே வேளையில், இந்த போரில் உக்ரைனுக்கு பல்வேறு நாடுகள் பொருளாதாரம் மற்றும் ராணுவ உதவிகளை வழங்கி வருகின்றன. அதே சமயம் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறார். 

இந்நிலையில் உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷிம்ஹால் இன்று (15.07.2025) தனது பதவியை ராஜினாமா செய்ததாக அறிவித்துள்ளார். பிரதமர் டெனிஸ் ஷிம்ஹால் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாகப் பிரதமராகப் பதவி வகித்த நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனையடுத்து ஷிம்ஹாலின் ராஜினாமா செய்ததை உக்ரைன் ஜனாதிபதி அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது. எனவே இந்த அறிவிப்பு உக்ரைன் நாடாளுமன்றத்திற்கு அனுப்பப்பட்டு அங்கு புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் நியமனத்திற்கு ஒப்புதல் பெறப்பட உள்ளது. 

முன்னதாக உக்ரைன் அமைச்சரவையில் மாற்றம் செய்து அதிபர் செலனெஸ்கி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்திருந்தார். அதில் அந்நாட்டுத் துணைப் பிரதமராகப் பதவி வகித்து வரும் யூலியா விரிடென்கோவை அந்நாட்டின் பிரதமராக முன்மொழிந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இவர் பொருளாதாரத் துறை அமைச்சராகவும் பதவி வகித்து வருகிறார்.  எனவே யூலியா விரிடென்கோவை புதிய பிரதமராக நியமிப்பது குறித்து உக்ரைன் நாடாளுமன்றம் விரைவில் முடிவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் டெனிஸ் ஷிம்ஹால் அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் நியமிக்கப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.