Turkey president crictized israel

Advertisment

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் ஒரு மாதத்தைக் கடந்துள்ள நிலையில், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இப்படியாக இரு தரப்பிலிருந்து ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனிடையே காசாவை சுற்றி வளைத்து தனது பீரங்கி குண்டுகளால் காசா நகரையே இஸ்ரேல் நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது.

தரைவழித் தாக்குதலைத் தீவிரப்படுத்திய இஸ்ரேல் கிட்டத்தட்ட அனைத்து தொலைத்தொடர்பு சேவைகளை அழித்து உலகத்திலிருந்து காசாவை தனிமைப்படுத்தியுள்ளது. ஹமாஸ் அமைப்பினரை ஒருவர் விடாமல் அழிக்க நினைக்கும் இஸ்ரேலின் தாக்குதலில் ஆயிரக்கணக்கான அப்பாவி பாலஸ்தீன மக்கள் தினந்தோறும் கொல்லப்பட்டு வருகின்றனர். அதில் 60 சதவீதம் பேர் பெண்களும், குழந்தைகளும் எனக் கூறப்படுகிறது. இரு தரப்பிற்கு இடையிலான இந்தப் போரில் பலரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இப்போரை நிறுத்த உலக நாடுகள் கோரிக்கை வைத்து வருகின்றன. இதனிடையே, காசாவில் உள்ள அல்ஷிபா மருத்துவமனையில் ஹமாஸ் படையினர் பதுங்கி இருப்பதாக இஸ்ரேல் குற்றம் சாட்டி வருகின்றது. மேலும், இந்த மருத்துவமனை மீது இஸ்ரேல் ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்தத் தாக்குதலில் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு எகிப்து, ஜோர்டான், சவுதி அரேபியா ஆகிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்குப் பதிலடியாக இஸ்ரேலுக்கான தனது தூதரை திரும்பப் பெறுவதாக பஹ்ரைன் நாட்டு நாடாளுமன்றம் தெரிவித்திருந்தது. மேலும், இஸ்ரேலுக்கு ஆதரவு அளித்ததாகக் கூறிய கோகோ கோலா மற்றும் நெஸ்லே ஆகிய தயாரிப்பு பொருட்களுக்கு துருக்கி நாடாளுமன்றம் தடை விதித்துள்ளதாக தெரிவித்திருந்தது.

Advertisment

இந்த நிலையில், ரசிப் தைய்யிப் எர்டோகன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “ஒரு நகரத்தையும், அங்கு வாழும் மக்களையும் முழுமையாக அழிக்கும் நடவடிக்கையை இஸ்ரேல் மேற்கொண்டு வருகிறது. இஸ்ரேல் ஒரு பயங்கரவாத நாடு என்பதை தெளிவாகவும், வெளிப்படையாகவும் கூறுகிறேன். இந்த கொடூரமான தாக்குதலை நடத்திய இஸ்ரேலின் அரசியல் மற்றும் ராணுவ தலைவர்களும் சர்வதேச நீதிமன்றத்தில் நிச்சயம் விசாரிக்கப்படுவார்கள்” என்று கூறினார். துருக்கி அதிபரின் இந்த பேச்சுக்கு இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர், “பயங்கரவாதத்தை ஆதரிக்கும் சில சக்திகள் இன்னும் இருக்கின்றன. துருக்கி அதிபர், துருக்கி கிராமங்கள் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்திய ஹமாஸ் பயங்கரவாதத்தை ஆதரிக்கிறார். அதனால், இவர்களிடம் இருந்து எந்தவித அறிவுரையும் எங்களுக்கு தேவையில்லை” என்று கூறினார்.