Turkey observes 7 days of national mourning

Advertisment

துருக்கியில் நேற்று அதிகாலை இந்திய நேரப்படி 4.17 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியிருந்தது. அதன் பிறகு பிற்பகலில் 7.5 ரிக்டர் அளவில் மேலும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. மேலும் 3வது முறையாக 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதன் காரணமாக துருக்கி மற்றும் சிரியாவில் குடியிருப்பு கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின. இஸ்ரேல் உள்ளிட்ட அண்டை நாடுகளிலும் இந்த நிலநடுக்கத்தின் தாக்கமானது உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கம் துருக்கி மற்றும் சிரியாவில் ஏராளமான உயிர்ச் சேதங்களையும், பொருட்சேதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நிலநடுக்கத்தால் துருக்கி மற்றும் சிரியாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்தைக் கடந்துள்ளதாகத்தற்போது தகவல் கிடைத்துள்ளது. மேலும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து மீட்புக் குழுவினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு வருகின்றனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த தொடர் நிலநடுக்கம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள உயிர்ச்சேதத்தினை தொடர்ந்து 7 நாட்கள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என்று துருக்கி அரசாங்கம் தெரிவித்துள்ளது. மேலும், வரும் 12 ஆம் தேதி வரை துருக்கி மற்றும் வெளிநாட்டுப் பிரதிநிதி அலுவலகங்களிலும் நாட்டின் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Advertisment

இந்த துயர சம்பவத்திற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலகத் தலைவர்கள் தங்களது வருத்தத்தைத் தெரிவித்து வருகின்றனர்.