ADVERTISEMENT

“உலகப்போர் ஏற்படும் அபாயம் இருக்கிறது” - டிரம்ப் எச்சரிக்கை

07:06 PM Apr 13, 2024 | mathi23

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

ADVERTISEMENT

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபோது, பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்கள் சிலர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள பிணைக் கைதிகளில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது.

ADVERTISEMENT

இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் மீது கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படை மூத்த தளபதி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனால், இஸ்ரேல் - ஈரான் இடையே போர் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு ஆயுதம் வழங்கி வருவதாகக் கூறப்படும் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் போர்ச்சூழல் நிலவும் பதற்றம் அதிகரித்துள்ளது. மேலும், இன்னும் ஓரிரு நாளில் தாக்குதல் நடத்த ஈரான் ராணுவம் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலை சமாளிப்பதற்கு இஸ்ரேலும் களமிறங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது, “இஸ்ரேல் - ஈரான் மோதல் விவகாரத்தில் உலகப்போர் ஏற்படும் அபாயம் உள்ளது. அமெரிக்காவிற்கு இது மிகவும் ஆபத்தான காலகட்டம். அமெரிக்காவில் நவம்பர் 5ஆம் தேதி அதிபர் தேர்தல் நடப்பதற்கு முன்பாக அதுவும் குறிப்பாக தற்போது உள்ள திறமையற்ற தலைவர்களின் ஆட்சியில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT