Skip to main content

கரோனா பரவல்; அவசரப்படும் ட்ரம்ப்... பின்னணியில் வணிகத்திட்டம்..? வலுக்கும் குற்றச்சாட்டு...

Published on 26/03/2020 | Edited on 26/03/2020

கரோனா வைரஸ் பரவல் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் தொழில் சாம்ராஜ்யத்தைச் சற்றே அசைத்துப்பார்த்திருக்கும் நிலையில், அமெரிக்காவில் லாக்டவுனை விரைவில் முடிவுக்குக் கொண்டுவர ட்ரம்ப் முயன்று வருவது அவரது நிறுவனத்தின் லாபத்தை கணக்கில் கொண்டே என்று சிலர் குற்றம்சாட்டி வருகின்றனர்.  

 

trump own business affected by corona and lockdown

 

 

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏழை நாடுகள், வளர்ந்த நாடுகள் என வேறுபாடின்றி அனைத்து நாடுகளையும் புரட்டி போட்டுள்ளது இந்த வைரஸ். அந்தவகையில் உலகளவில் கரோனாவுக்குப் பலியானோர் எண்ணிக்கை 21 ஆயிரத்தைத் தாண்டியுள்ள சூழலில் அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 13,347 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனையடுத்து அந்நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68,203 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இதனால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் அமெரிக்காவில் 1,027 ஆக உயர்ந்துள்ளது.

ஒருபுறம் அமெரிக்கா இப்படியான தீவிர பாதிப்புகளை எதிர்கொண்டுள்ள அதேநிலையில், அந்நாட்டின் அதிபரான ட்ரம்ப், விரைவில் தொழில் நிறுவனங்களை மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவர், "லாக்டவுன் செய்வதற்காக இந்நாடு கட்டமைக்கப்படவில்லை" எனப் பேசினார். உலக நாடுகள் பலவும் கரோனா பீதியால் முடங்கியுள்ள சூழலில், அமெரிக்க அதிபரின் இந்த அவசரத்திற்குப் பின்னால், சொந்த வணிக நோக்கமும் அடங்கியுள்ளதாகச் சிலர் தெரிவிக்கின்றனர்.

கடந்த நிதியாண்டில் சுமார் 3,250 கோடி ரூபாய் வருமானம் ஈட்டிய ட்ரம்ப்பின் தொழில்கள் தற்போது கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன. 2,200க்கும் மேற்பட்ட சொகுசு அறைகளைக் கொண்ட அவரது ஐந்து நட்சத்திர விடுதிகள் அமெரிக்கா மற்றும் கனடாவில் பெரும்பாலும் காலியாகவே உள்ளன. அதேபோல அமெரிக்கா, ஸ்காட்லாந்து மற்றும் அயர்லாந்தில் உள்ள அவரது கோல்ஃப் மைதானங்கள் மூடப்பட வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளன. அதேபோல இந்தியா உட்பட உலகின் பல இடங்களில் உள்ள ரியல் எஸ்டேட் தொழில்களும் முடங்கியுள்ளது. இதன் காரணமாகதான், மக்களின் பாதுகாப்பை அலட்சியப்படுத்தி லாக்டவுனை முடிவுக்குக்கொண்டு வருவதில் ட்ரம்ப் அவசரப்பட்டு வருவதாக அவர் மீது ஒரு தரப்பினர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“அமெரிக்காவிற்கு கிடைத்த வெற்றி” - நீதிமன்றத் தீர்ப்பால் மகிழ்ச்சியில் டிரம்ப்

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
Trump happy with court ruling and he posted "Victory for America" ​​

குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க அதிபராக கடந்த 2016 ஆம் ஆண்டு வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து நடந்த 2020 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடனை எதிர்த்துப் போட்டியிட்டார். அந்த தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்று அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றார். நான்கு ஆண்டுகள் கொண்ட அமெரிக்க அதிபரின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக, ஜனநாயகக் கட்சி சார்பாக ஜோ பைடனும், குடியரசு கட்சி சார்பாக டொனால்ட் டிரம்பும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதற்கிடையே, கடந்த 2021 ஆம் ஆண்டு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடனிடம் ஆட்சி பொறுப்பை வழங்குவதற்கு வழிவகை செய்யும் வெற்றிச் சான்றிதழ் அளிப்பு நிகழ்ச்சி நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. அப்போது அந்த நிகழ்ச்சியை நடத்த விடாமல், டிரம்ப்பின் ஆதரவாளர்கள் வெள்ளை மாளிகை முன்னால் நின்று கலவரத்தில் ஈடுபட்டனர். அவர்களை விரட்டியடிக்க போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 4 பேர் பரிதாபமாக பலியாகினர். ஒட்டுமொத்த அமெரிக்காவையும் உலுக்கிய இந்த கலவரத்தில் டொனால்ட் ட்ரம்ப்புக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும், அந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக டிரம்ப் பல்வேறு குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டுகளும் எழுந்தன.

அதனைத் தொடர்ந்து, வெள்ளை மாளிகையை விட்டு டிரம்ப் வெளியேறிய பின்பு, அமெரிக்கா அரசின் ரகசிய ஆவணங்களை அவர் எடுத்துச் சென்றதாகக் குற்றச்சாட்டும் எழுந்தது. இது தொடர்பாக முன்னாள் அதிபர் டிரம்ப் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகின்றது.

இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் உள்ள நீதிமன்றங்களில் அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. அந்த வகையில், கொலராடோ மாகாணத்தின் நீதிமன்றத்திலும் நாடாளுமன்ற கலவரம் தொடர்பாக வழக்கு தொடரப்பட்டு, விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் கொலராடோ நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 19 ஆம் தேதி பரபரப்பு தீர்ப்பு ஒன்றை அளித்தது. அதில், இந்த ஆண்டு (2024) நடைபெறும் அதிபர் தேர்தலில் போட்டியிட டிரம்புக்கு தகுதி இல்லை என்ற பரபரப்பு தீர்ப்பை வழங்கியது. மேலும், குடியரசு கட்சியின் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலின் வாக்குச் சீட்டில் டிரம்ப்பின் பெயர் இடம் பெறக்கூடாது என்றும், அவ்வாறு இடம்பெற்றால் அவருக்கு அளிக்கும் வாக்கு செல்லாது என்றும் தெரிவித்தது. 

இதனையடுத்து, இந்தத் தீர்ப்பை எதிர்த்து டொனால்ட் டிரம்ப், அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் மீதான விசாரணை நேற்று (05-03-24) அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடத் தடையில்லை எனக் கூறி கொலராடோ நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தனர். அமெரிக்க உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து டொனால்ட் டிரம்ப், சமூக வலைத்தளத்தில், ‘அமெரிக்காவிற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி’ என்று குறிப்பிட்டுள்ளார். 

Next Story

சற்றே குறைந்த கொரோனா பரவல்; மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

Published on 02/01/2024 | Edited on 02/01/2024
Slightly less corona spread; Information from Union Ministry of Health

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகை கொரோனாவான ஜேஎன் 1 கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், கடந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. அதேபோல், கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. மேலும், ஒரே நாளில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தது.

இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் நேற்று முன்தினம் (31-12-23) 841 ஆக இருந்த கொரோனா தொற்று நேற்று (01-01-24) 636 ஆக குறைந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.5 கோடியை தாண்டியுள்ளதாகவும், நாடு முழுவதும் இதுவரை 5.33 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.