Trump on India-Pakistan conflict

Advertisment

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறின. இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்து வந்த நிலையில், தாக்குதல்களை நிறுத்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். அதனை தொடர்ந்து இரு நாடுகளும் தாக்குதலை நிறுத்துவதாக அறிவித்தது.

இந்த தாக்குதலை நிறுத்தியது அமெரிக்கா தான் என்றும், வர்த்தகத்தை முன்னிறுத்தி தான் இந்தியா - பாகிஸ்தானுடனான தாக்குதலை நிறுத்தினேன் என்றும் டிரம்ப் தெரிவித்தார். இந்த விவகாரம் ஒட்டுமொத்த நாட்டில் சலசலப்பை ஏற்படுத்தியது. அமெரிக்கா அதிபர் விட்ட எச்சரிக்கைக்கு கட்டுப்பட்டு பாகிஸ்தானுடனான தாக்குதல் நிறுத்தத்துக்கு இந்தியா ஒப்புகொண்டதா? என்ற கேள்வி விவாதப் பொருளாக மாறியது. இது குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன.

பாகிஸ்தான் உடனான தாக்குதல் நிறுத்தத்திற்கு பின்னால் வர்த்தகம் தொடர்பான எந்த உரையாடலும் டொனால்ட் டிரம்புடன் நடைபெறவில்லை என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடந்த 13ஆம் தேதி தெரிவித்து டொனால்ட் டிரம்பின் கூற்றை இந்தியா மறுத்தது. இருந்த போதிலும், வர்த்தகத்தை முன்னிறுத்தி தான் இந்தியா - பாகிஸ்தானுடனான தாக்குதலை நிறுத்தியதாக கடந்த மே 14ஆம் தேதி சவுதி அரேபியாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசி சர்ச்சையை கிளப்பினார். அதற்கும் இந்தியா மறுப்பு தெரிவித்தது. அதனை தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தானுடனான தாக்குதலை அமெரிக்கா தான் நிறுத்தியது என கடந்த மே 22ஆம் தேதி வெள்ளை மாளிகையில் தென்னாப்பிரிக்கா அதிபரை சந்தித்த போது டொனால்ட் டிரம்ப் மீண்டும் அதே கூற்றை முன்வைத்து சர்ச்சையைக் கிளப்பினார்.

Advertisment

அனைத்து துப்பாக்கிச் சூடுகளையும், இராணுவ நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்துவதற்கு இந்தியா மற்றும் பாகிஸ்தானின் இராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல்கள் (DGMOs) ஒரு உடன்பாட்டை எட்டியதாக மத்திய அரசு சில தினங்களுக்கு முன்பு தெரிவித்தது.

Trump on India-Pakistan conflict

இந்த நிலையில், இந்தியா - பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தக் கூற்றை மீண்டும் டொனால்ட் டிரம்ப் பேசியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “இந்தியாவும் பாகிஸ்தானும் சண்டையிடுவதை நாங்கள் தடுத்தோம். அது ஒரு அணுசக்தி பேரழிவாக மாறியிருக்கலாம் என்று நான் நம்புகிறேன். இந்தியத் தலைவர்கள், பாகிஸ்தான் தலைவர்கள் மற்றும் மக்களுக்கும் என் நன்றியை சொல்ல விரும்புகிறேன். நாங்கள் வர்த்தகம் பற்றிப் பேசினோம்.

Advertisment

ஒருவருக்கொருவர் துப்பாக்கிச் சூடு நடத்துபவர்களுடனும், அணு ஆயுதங்களைப் பயன்படுத்தக்கூடியவர்களுடனும் நாங்கள் வர்த்தகம் செய்ய முடியாது' என்று சொன்னோம். இந்தியா மற்றும் பாகிஸ்தானின் தலைவர்கள், சிறந்த தலைவர்கள் அவர்கள் புரிந்து கொண்டனர், ஒப்புக்கொண்டனர், எல்லாம் நின்றுவிட்டது.நாங்கள் மற்றவர்கள் சண்டையிடுவதைத் தடுக்கிறோம், ஏனென்றால் எவரையும் விட நாங்கள் சிறப்பாகப் போராட முடியும். எங்களிடம் உலகின் மிகப்பெரிய இராணுவம் உள்ளது. உலகின் மிகப்பெரிய தலைவர்கள் எங்களிடம் உள்ளனர்” என்று கூறினார்.