Skip to main content

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் முடக்கம்; ஒரு மணி நேரத்திற்கு இவ்வளவு கோடி இழப்பா? 

Published on 06/03/2024 | Edited on 07/03/2024
Too much loss per hour for Block Facebook, Instagram

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு, மார்க் ஜுக்கர்பெர்க் என்பவர் தொடங்கிய நிறுவனம் ஃபேஸ்புக். உலகம் முழுவதும் உள்ள இணைய பயனர்களுக்கு தங்களது கருத்துகள் மற்றும் தகவல் பரிமாற்றத்திற்கான சமூக வலைத்தளமாக ஃபேஸ்புக் முன்னிலையில் உள்ளது. தற்போது, மார்க் ஜுக்கர்பெக் மெட்டா எனும் நிறுவனத்தைத் தொடங்கி அதன் கீழ் ஃபேஸ்புக் மற்றும் மற்றொரு பிரபல சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை நிர்வகித்து வருகிறார்.

உலகளவில் பயன்படுத்தப்பட்டு வரும் பிரபலமான சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின் செயல்பாடுகள், திடீரென்று உலகம் முழுவதும் நேற்று (05.03.2024) இரவு 9 மணியளவில் இருந்து சுமார் ஒரு மணி நேரம் வரை முடங்கியிருந்தது. சமூக வலைத்தள கணக்குகளின் பக்கங்கள் தானாகவே லாக் அவுட் (Logout) ஆகியதால் பயனர்கள் தவித்து வந்தனர். மேலும் தகவல் தொடர்பு கிடைக்காததால் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் இணையவாசிகள் அவதியடைந்தனர். இதனையடுத்து, தொழில்நுட்பக் கோளாறுகள் சரி செய்யப்பட்டு 2 தளங்களும் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தன. 

இந்நிலையில், மெட்டா நிறுவனத்தின் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் 1 மணி நேரம் முடங்கியதால் அமெரிக்க பங்குச் சந்தையில் மெட்டா பங்குகளின் சந்தை மதிப்பு 1.6 சதவீதம் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம், இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் 23,127 கோடி இழந்துள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. 

‘புளூம்பெர்க்’ என்ற நிறுவனம் நேற்று (05-03-24) வெளியிட்ட உலகப் பணக்காரர்கள் குறித்த புதிய பட்டியலில், 179 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் உலகின் 4வது பெரும் பணக்காரராக மெட்டா சி.இ.ஓ மார்க் ஜுக்கர்பெர்க் இருந்தார். இதற்கிடையே, ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் நேற்று 1 மணி நேரம் முடங்கியதால், மார்க் ஜுக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு ஒரே நாளில் $2.79 பில்லியன் டாலர் குறைந்து தற்போது $176 பில்லியனாக உள்ளது. இருப்பினும், உலகின் நான்காவது பணக்காரர் என்ற நிலையை மார்க் ஜுக்கர்பெர்க் தக்க வைத்துள்ளார். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

இஸ்டாகிராமில் பெண் போலப் பேசி மோசடி; இளைஞர் எடுத்த விபரீத முடிவு!

Published on 05/07/2024 | Edited on 05/07/2024
teenager who collected money by talking like a girl on Instagram

ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி அருகே உள்ள பெருந்தலையூர், நத்தக்காட்டு வீதியைச் சேர்ந்தவர் பாஸ்கரன்(32). இவர், பெருமா நல்லூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். பாஸ்கரன், இன்ஸ்டாகிராமில் பெண் போல பேசி ஏமாற்றி, கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த ஆகாஷ் மற்றும் சிலரிடம் பணம் வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. அவர் ஆண் என்பதை தெரிந்துகொண்ட அவர்கள் பணத்தை திருப்பித் தருமாறு பாஸ்கரனுக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர்.

இதையடுத்து, அவர்களுக்கு பணத்தை திருப்பித் தருவதற்காக பாஸ்கரன், தனது உறவினர்களிடம் பணம் கேட்டு வந்துள்ளார். மேலும், 5ஆம் தேதிக்குள்(இன்று) பணம் கொடுத்துவிடுவதாக ஆகாஷிடம் உறுதியளித்திருந்தாராம். ஆனால், கேட்ட இடத்தில் பணம் கிடைக்காததால் பாஸ்கரன் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்த நிலையில், நேற்று பாஸ்கரன் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். அவரது பெற்றோர் வேலை விஷயமாக வெளியில் சென்றுவிட்டனர். 

பின்னர், மாலையில் அவர்கள் வீடு திரும்பிய போது வீட்டினுள் பாஸ்கரனை காணவில்லை. மாடிக்கு சென்று பார்த்தபோது அங்குள்ள அறையில் பாஸ்கரன் தூக்கிட்டு தொங்கியுள்ளார். உடனடியாக அவரை மீட்டு, கவுந்தப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர், வரும் வழியிலேயே பாஸ்கரன் இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, பாஸ்கரனின் தாய் சித்ரா(58) அளித்த புகாரின் பேரில், கவுந்தப்பாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

இன்ஸ்டாகிராம் காதல்; ப்ளான் போட்டு ஐபோன் வாங்கிய சிறுவர்கள்

Published on 14/06/2024 | Edited on 14/06/2024
girl sold her mother's jewelry and bought an iPhone for her boyfriend

திருப்பூரைச் சேர்ந்தவர் 17 வயது சிறுவன். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியிடம் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்துள்ளார். தினந்தோறும் இன்ஸ்டாகிராம் சேட்டிங்கில் பேசி வந்த சிறார்களுக்கு இடையே ஒரு கட்டத்தில் நட்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, இருவரும் சேட்டிங்கிலேயே தகவல்களை பரிமாறி வந்துள்ளனர். இப்படி, நாட்கள் மாதங்களாக அதிகரிக்க இருவருக்குள்ளும் காதல் மலர்ந்துள்ளது. இன்ஸ்டா ஸ்டோரியில் காதல் ஸ்டோரியாக தேர்ந்தெடுத்து இருவரும் காதல் செய்து வந்ததாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில்,  சிறுமி தன்னிடம் சிறிய அளவிலான செல்போன் தான் உள்ளது, தனக்கு வசிதிகள் நிறைந்த செல்போன் ஒன்று வேண்டும். அதை வாங்கித்தர முடியுமா? என்று காதலனிடம் ஏக்கத்துடன் கேட்டுள்ளார். அதற்கு, சிறுமியிடம் இன்ஸ்டா சேட்டிங்கில் பதில் அளித்த காதல் சிறுவன், தன்னிடம் பணம் இல்லை என்றும், வேலைக்கு சென்றால் முதல் சம்பளத்தில் உனக்கு தான் செல்போன் என்று கூறியுள்ளார். இருப்பினும், தொடர்ந்து சிறுமியிடம் சேட்டிங் செய்த சிறுவன், வேண்டுமென்றால் உனக்கு புது செல்போன் வாங்க ஐடியா கொடுக்கவா? என்று கேட்டுள்ளார். அதற்கு என்ன ஐடியா என்று சிறுமி  கேட்க, அவரின் குடும்ப பொருளாதார நிலை நன்கு அறிந்த சிறுவன், 'நீ வேண்டும் என்றால் பணம் கொண்டுவா? நானே உனக்கு நல்ல செல்போனாக வாங்கித் தருகிறேன்..' என்று கூறியுள்ளார். அதோடு, உன்னை நேரில் சந்திக்க ஆவலுடன் இருக்கிறேன் என்றும் காதலை சேட்டிங்கில் அந்த சிறுவன் கொட்டியுள்ளார். இன்ஸ்டா காதலன் கூறிய ஆசை வார்த்தைகளைக் கேட்டு மயங்கி சிறுமி, வீட்டில் பணம் கேட்டால் சிக்கிக் கொள்வோம் என்று அறிந்து திட்டம் ஒன்றைத் தீட்டியுள்ளார். 

அதன்படி, தனது தாயின் 7 பவுன் நகையை வீட்டில் இருந்து திருடிக்கொண்டு பேருந்தில் ஏறி காதலனைப் பார்க்க திருப்பூர் மத்திய பஸ் நிலையம் சென்றுள்ளார். அங்கு, காதலியை காண முன்கூட்டியே சிறுவன் காத்திருக்க இருவரும் இன்ஸ்டாகிராம் பழக்கத்திற்கு பிறகு ஒன்றாக நேரில் சந்தித்துக் கொண்டு காதலைப் பரிமாறியுள்ளனர். பிறகு, சிறுமி திருடிக் கொண்டு வந்த தாயின் நகையைக் காதலனிடம் கொடுத்துள்ளார். அதை வாங்கிய சிறுவன் அடகு கடையில் நகையை விற்று அதன் மூலம் பணத்தை உடனே திரட்டி இருக்கிறார். பின்னர், சிறுமிக்கு 1 லட்சம் ரூபாயில் ஐபோன் ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார். அதேசமயம் சமயோசிதமாக செயல்பட்ட காதல் சிறுவன் தனக்கும் அதே விலையில் மற்றொரு ஐபோனை சிறுமியின் பணத்தில் வாங்கியுள்ளனர். அதன் பின்னர், இருவரும்  ஐபோனை அன் பாக்ஸிங் செய்த கையோடு திருப்பூரில் ஒன்றாகச் சுற்றி நேரத்தை கழித்துள்ளனர். பிறகு நேரம் கடந்ததால் வீடு திரும்பியுள்ளனர். இந்த நிலையில், வீட்டிலிருந்த நகை காணாமல் போயிருப்பதை கண்டு சிறுமியின் தாய் அதிர்ச்சி அடைந்துள்ளார். நகை வீட்டில் வேறு எங்கும் இருக்கிறதா?  என்று தேடும்போது சிறுமி அறையில் புது ஐபோனைபார்த்த அவரது தாய், 'உனக்கு இந்த போன் எப்படி வந்தது?' என்று கேட்டுள்ளார்.

அப்போது, சிறுமி முன்னுக்கு முன் பின் முரணாக பதில் அளிக்க, சிறுமியிடம்  அவரது தாய் கண்டிப்புடன் நடத்திய விசாரணையில் உண்மை தெரிய வந்தது. நகையைத் திருடிச் சென்று காதலுடன் சேர்ந்து ஐபோன் வாங்கியதைச் சிறுமி ஒப்புக் கொண்டுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் திருப்பூர் வடக்கு மகளிர் போலீசில் நடந்த சம்பவம் குறித்து புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவனை அழைத்து விசாரணை நடத்தினர். அதில், சிறுவனும் உண்மையை ஒத்துக் கொண்டார். பின்னர் சிறுவனிடம் இருந்த செல்போன் மற்றும் பணத்தைப் பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.