Skip to main content

அமேசான், ட்விட்டர், ஃபேஸ்புக் நிறுவனங்களில் ஆயிரக்கணக்கானோர் வேலையிழப்பு - இந்தியர்களுக்கும் ஆபத்து

Published on 19/11/2022 | Edited on 19/11/2022

 - தெ.சு.கவுதமன்

nn

 

கரோனா பெருந்தொற்றின் பரவலால் கடந்த 2020 - 2021ஆம் ஆண்டுகளில் உலகெங்கும் பொருளாதாரச்சரிவு ஏற்பட்டது. கரோனா பொது முடக்கம் படிப்படியாக விலக்கப்பட்டு, விமான போக்குவரத்தும், கப்பல் போக்குவரத்தும் சீரடைந்த பின்பே கொஞ்சம் கொஞ்சமாகப் பொருளாதார நிலை சீரடையத் தொடங்கியது. இந்தச் சூழலில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் பிப்ரவரி மாத இறுதியில் உக்ரைனுக்குள் ரஷ்யா நுழைந்து தாக்கத் தொடங்கியதில் உக்ரைன் பெருத்த நாசத்தை எதிர்கொள்ளத் தொடங்கியது. உக்ரைன் நகரங்களைத் தொடர்ச்சியாகத் தாக்கி சின்னா பின்னப்படுத்திய ரஷ்யாவின் போக்கினை அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் கண்டித்தன. இந்தியா நடுநிலை வகித்தது.

 

இந்நிலையில், ரஷ்யாவின் அடாவடித்தனத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக அமெரிக்கா, ரஷ்யாவின் மீது பொருளாதாரத்தடை விதித்தது. உலகளவில் பெரிய பெட்ரோலிய ஏற்றுமதி நாடான ரஷ்யாவிடமிருந்து பெட்ரோல் வாங்குவதை அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் நிறுத்திக்கொண்டன. இதனால் ரஷ்யாவில் உற்பத்தியாகும் பெட்ரோல் தேக்கமடைந்ததோடு, ஐரோப்பிய நாடுகளில் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டது.

 

nnn

 

அடுத்த பாதிப்பாக, உணவு ஏற்றுமதி இறக்குமதியில் உலகளவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவும் உக்ரைனும், கோதுமை உற்பத்தியில் உலகளவில் மூன்றாவது இடம் வகிக்கின்றன. தற்போது கோதுமை ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதால் இதை நம்பியிருக்கும் குறைந்த வருவாய் நாடுகளான ஆப்பிரிக்க நாடுகள் பலவற்றிலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் பார்லி உற்பத்தியிலும், சூரியகாந்தி உற்பத்தியிலும் ரஷ்யாவும்  உக்ரைனும் முக்கிய பங்கு வகிக்கும் நிலையில் இதை நம்பியுள்ள நாடுகளுக்கும் பலத்த அடியாகியுள்ளது.

 

ரஷ்யாவுக்கு எதிராக, உக்ரைனுக்கு ராணுவ உதவியளிக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கு மறைமுகமாக அடி கொடுக்கும் வகையில் அந்நாடுகளுக்குச் செல்லும் எரிவாயுக் குழாயை நிறுத்தி ஐரோப்பிய நாடுகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து வருகிறது ரஷ்யா. குளிர்காலம் வந்தாலே ஐரோப்பிய நாடுகளுக்குக் கதகதப்பு தேவைப்படும். அதற்கு எரிவாயு மிகவும் அவசியம். தற்போது முக்கியமான எரிவாயு குழாயில் தொழில்நுட்பப் பிரச்சனை என்றும், மெயின்டெனன்ஸ் என்றும் ஏதேதோ காரணம் சொல்லி எரிவாயு சப்ளையைக் குறைத்துள்ளது ரஷ்யா. இதன் காரணமாக ஐரோப்பிய நாடுகள்,  மாற்று எரிபொருளை அதிக விலைக்குத் தேட வேண்டிய கட்டாயச் சூழலில் இருக்கின்றன. ஆக, கொரோனாவின் தாக்கத்திலிருந்து மீண்ட உலக நாடுகள், தற்போது இந்தப் போரின் காரணமாக மீண்டும் பொருளாதாரச் சரிவை எதிர்கொண்டு வருகின்றன.

nn

 

இதன் எதிரொலியாக, உலகின் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் வருவாய் இழப்பைச் சந்தித்து அதனைச் சரிசெய்வதற்காக ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. உலகின் முன்னணி கார்ப்பரேட் நிறுவனங்களான அமேசான், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட நிறுவனங்களின் இத்தகைய அறிவிப்பு கார்ப்பரேட் உலகையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. மிகப்பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான், உலகம் முழுவதுமுள்ள அந்நிறுவனத்தின் பணியாளர்களில் 10 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்துள்ளது. இதுகுறித்த தகவலை இ-மெயில் மூலம் பணியாளர்களுக்குத் தெரிவித்துள்ளது. இந்தப் பணி நீக்கம் அவர்களுடைய ஊழியர்கள் எண்ணிக்கையில் 3% என்று கூறப்படுகிறது.

 

அதேபோல்  பேஸ்புக், வாட்ஸ்அப் ஆகிய சமூக வலைத்தளங்களின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனம் 11 ஆயிரம் ஊழியர்களை பணியிலிருந்து நீக்கியது. இது அந்த நிறுவனத்தின் மொத்தப் பணியாளர்களில் 13 சதவீதமாகும். அடுத்ததாக ட்விட்டர் நிறுவனத்தை சமீபத்தில் மூன்றரை லட்சம் கோடிக்கு விலை கொடுத்து வாங்கிய எலான் மஸ்க், அந்நிறுவனத்தை வாங்கியதிலிருந்தே பணியாளர்கள் விஷயத்தில் கெடுபிடியாக நடந்து வருகிறார். ஒருபுறம் ட்விட்டரில் ப்ளூ டிக் ஆப்ஷனுக்கு விலை நிர்ணயம் செய்தவர்; தனது நிறுவன ஊழியர்கள் பணியிலிருந்து விலக விரும்பினால் விலகலாமென பச்சைக்கொடி காட்டினார். அதோடு, 3,700 பணியாளர்களை இவரே பணி நீக்கம் செய்துள்ளார். 'இன்று தான் உங்களுடைய கடைசி பணி நாள்' என்று இ-மெயிலில் ஊழியர்களுக்குச் செய்தி அனுப்பி அதிர்ச்சியளித்தார். இவர்களுக்கான பணி இழப்பீடாக 2023 ஜனவரி மாதம் வரையிலான ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

 

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 1,000 பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பியுள்ளது. ஃபைனான்சியல் டிரேடிங் நிறுவனமான ராபின்ஹூட் தனது ஊழியர்களில் 23% பேரை வேலையை விட்டு நீக்கியுள்ளது. இந்த மிகப்பெரிய பணி நீக்க நடவடிக்கைகளால் அமெரிக்காவில் இந்த ஆண்டில் மட்டும் 1,20,000 பேர் பணியிழப்பைச் சந்தித்துள்ளார்கள். ஏற்கெனவே இந்தியாவில் பெட்ரோல் விலை எகிறியுள்ளது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் படு வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் முடிவுக்கு வராமல் தொடர்ந்தபடியே இருக்கும்பட்சத்தில் இந்தியாவில் இதன் தாக்கம் இன்னும் கடுமையாக இருக்குமென்று பொருளாதார வல்லுநர்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்