Skip to main content

"அன்பை விதைப்போம், சாதி – மதத் தூய்மைவாதம் என்ற பெயரால் வெறுப்பை விதைக்கக்கூடாது" -முனைவர் தொல்.திருமாவளவன்

Published on 19/09/2020 | Edited on 19/09/2020

 

thol thirumavalavan speech at south Korea Tamil conference

 

 

மனிதன் புலம்பெயர்வதும், தங்கிய இடத்தில் தனது மிச்சங்களை விட்டுச் செல்வதும் மனிதகுல வரலாறு நெடுகிலும் காணக்கிடக்கிறது. எல்லைகளைத் தாண்டி மனிதன் பரவி வாழ்ந்தான். பல்வேறு காரணங்களுக்காக அவன் உலகின் பகுதிகளுக்கு பயணம் செய்திருக்கிறான். ஆனால், மொழியால், சாதியால், மதத்தால் தங்களை வேறுபடுத்தி, தூய்மைவாதம் என்ற பெயரால் வெறுப்பை விதைப்பதுதான் ஆபத்தாக முடிகிறது. மனிதன் கண்டுபிடித்த கோட்பாடுகளில் ஜனநாயகம்தான் உயர்ந்த கோட்பாடு என்று கொரியா தமிழ்ச்சங்க சர்வதேச கருத்தரங்கில் தொல்.திருமாவளவன் பேசினார்.

 

கொரியா தமிழ்ச்சங்கமும், தென்புலத்தாரும் இணைந்து நடத்திய கொரியா தமிழ் உறவுகள் ஒரு பார்வை என்ற சர்வதேச கருத்தரங்கை நடத்தின. இந்த கருத்தரங்கை முதன்மை ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஆரோக்கியராஜ், பொறியாளர் சகாய டர்சியூஸ், முனைவர் ராமசுந்தரம், முனைவர் பத்மநாபன், முனைவர் கிறிஸ்டி காத்தரின், பொறியாளர் ஆனந்தகுமார், முனைவர் செ.அரவிந்தராஜ் ஆகியோர் நெறிப்படுத்தினார்கள். கருத்தரங்கில் கொரியா தமிழ் உறவுகள் குறித்து ஒரிசா பாலு, முனைவர் நா.கண்ணன் ஆகியோர் பேசினார்கள். இறுதியாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது.

 

“தமிழன் கடல்கடந்து வணிகம் செய்திருக்கிறான். படைநடத்தி நாடுகளை கைப்பற்றியிருக்கிறான். இவற்றுக்கெல்லாம் இன்றைக்கு ஆதாரங்கள் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. தமிழன் என்று சொல்லும்போது நமக்கு தலைநிமிர்வு உண்டு. கிடைக்கிற வரலாற்றுக் குறிப்புகள் நமக்கு சிறப்புச் சேர்க்கின்றன. குறிப்பாக மனிதகுலம் ஒரே இடத்தில் முடங்கிக் கிடக்கவில்லை. புலம்பெயர்தல் என்பது மனிதகுலத்தில் தவிர்க்க முடியாத விஷயம். 

 


பல்வேறு காரணங்களுக்காக புலம்பெயர்ந்தனர். அப்படி புலம்பெயர்ந்த மனிதன் ஓரிடத்தில் தங்கிவிடுகிறான். கொரியாவில் தமிழனின் எச்ச, சொச்சங்கள் இருப்பதாக சொல்லும்போது, இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் பிறநாட்டைச் சேர்ந்தவர்கள் வந்து தங்கியதற்கான ஆதாரங்களை காணமுடியும். ஆங்கிலேயர்களின் அடையாளங்களும், இஸ்லாமியர்களின் மிச்சங்களும் அப்படிப்பட்ட ஆதாரங்கள்தான்.

 

அப்படியானால், கொரிய மண்ணில் நாம் காணுகிற தமிழின் மிச்ச, சொச்சங்கள் முக்கியத்துவம் பெற்றவை இல்லையா என்று கேட்கக்கூடும். முக்கியத்துவம் வாய்ந்ததுதான். அங்கே கிடைத்திருக்கிற முதுமக்கள் தாழிகள், சுமைதாங்கிக் கற்கள், எழுத்துருக்கள் எல்லாம் நமக்கு சிறப்புச் சேர்ப்பவைதான். நமக்கும் அவர்களுக்குமான தொடர்புகளை உறுதிப்படுத்துகின்றன. பொதுவாக ஒரு தேசத்தில் இன்னொரு இனத்தின் மிச்சங்கள் காணக்கிடைக்கின்றன என்றால் ஒன்று தமிழர்கள் அங்கே தங்கி இனக்கலப்பால் புதிய இனமாக உருமாறியிருக்க வேண்டும். அல்லது ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி தங்கள் கலாச்சாரத்தை பரப்பியிருக்க வேண்டும்.

 

ஒரு முக்கியமான விஷயம் மனிதன் ஒரு எல்லையை வரையறுத்து அதற்குள் முடங்கிக் கிடக்கமுடியாது. இது இயற்கைக்கு எதிரானது. இந்த பூமி எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானது. ஆனால், ஒவ்வொருவரும் தங்களுக்குள் எல்லைகளை வரையறுத்துக்கொண்டு, வேலிகளைப் போட்டுக்கொண்டு தனித்துவம் என்ற பெயரால் பாரம்பரிய அடையாளங்களை தக்கவைத்துக்கொண்டு முட்டிமோதிக்கொண்டு நம்மைநாமே பகைத்துக்கொண்டு, அழித்துக்கொண்டு சிதைந்துகொண்டிருக்கிறோம்.

 

இன்னும் நூறாண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் பிறக்கிறவர்கள் எல்லாம் எந்த தேசத்தில் போய் வாழமுடியும்? ஆதிகாலத்தில்  மன்னர்கள் இருந்தார்கள் தேசங்கள் இருந்தன என்றாலும், பல்வேறு இனக்குழுக்கள் நாடுவிட்டு நாடு, தேசம்விட்டு தேசம் பரவி இனக்கலப்பு. மொழிக்கலப்பு, கலாச்சாரக் கலப்புகளுக்கு வாய்ப்பு இருந்தது. ஆனால், இன்றைக்கு எல்லாவற்றிலும் ஒரு தூய்மைவாதம் பேசுகிறோம். மொழிக்கலப்பு, சாதிக்கலப்பு, மதக்கலப்பு கூடாது என்று பேசுகிறோம். மீறிக் கலந்துவிட்டால் கவுரவக் கொலைகளை நடத்துகிறோம். 

 

இந்த தூய்மைவாதம்தான் தீட்டு என்ற இன்னொரு சிந்தனைப்போக்கையும் வளர்க்கிறது. நமது பாரம்பரியங்களையும் அடையாளங்களையும் தேடும் போக்கு இருக்கட்டும். அவற்றை நமக்கு அடுத்துவருகிற தலைமுறைக்கு சொல்வோம். புத்துணர்வு பெறுவோம். ஆனால் இந்த எல்லைகளைக் கடந்து மனிதநேயம் தழைக்க வேண்டும். சாதியை வைத்தோ, மதத்தை வைத்தோ, மொழியை வைத்தோ மனிதர்களை பிரிக்கும் போக்கு ஆபத்தானது. சாதி தூய்மைவாதம், மத தூய்மைவாதம் உள்ளிட்டவை மனிதநேயத்திற்கு எதிரானது. 

 

நமது வரலாற்று பாரம்பரியங்கள் நமக்கு தலைநிமிர்வைத் தருகின்றன. நமது முன்னோரின் ஆளுமை, போர்த்திறன், இலக்கிய இலக்கண அறிவு நமக்கு சிறப்பை தருகின்றன. ஆனால், இன்றைக்கு இருக்கும் தலைமுறை அறிவானது என்றும் முந்தைய தலைமுறை அறிவற்ற சமூகம் என்றும் கருதிவிடக்கூடாது. நமது தந்தை நம்மைக்காட்டிலும் படிப்பறிவு இல்லாதவர் என்ற எண்ணம் கூடாது. தந்தையோ, அவருடைய தந்தையோ, அவருடைய முப்பாட்டனோ, அவருக்கும் முந்திய பல ஆயிரம் தலைமுறைகளுக்கு முந்தைய சமூகமோ நம்மைக் காட்டிலும் அறிவானதாக இருந்திருக்கலாம். 

 

எழுச்சிபெற்று, பின்னர் ஒரு கட்டத்தில் வீழ்ச்சியடைந்து, மீண்டும் எழுச்சிபெற்றுத்தான் இந்த மனிதகுலம் தழைத்து செழித்திருக்கிறது. மனிதகுலம் கண்டுபிடித்தவற்றுள், ஜனநாயக கோட்பாடுதான் மிகச்சிறப்பானது. ஜனநாயகம்தான் சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை நிலைநாட்டுகிறது. தமிழனுக்கு நண்பன் தமிழன்தான் என்றில்லை. தமிழர்களாய் இருக்கிற நமக்கு நண்பர்கள் ஜனநாயக சக்திகள்தான். மொழியால் இனத்தால், நாட்டால் யாராக இருந்தாலும் அவன் ஜனநாயகவாதி என்றால் அவன்தான் நமக்கானவன் என்பதும், அவன்தான் நாம் விரும்புகிற மனிதன். இந்த கருத்தரங்கில் என்னிடம் கொரியா தமிழ்ச்சங்கம் முன்வைத்துள்ள கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட அரசுகளிடம் எடுத்துச்சென்று உரிய நடவடிக்கை எடுக்க உறுதி அளிக்கிறேன்” என்று பேசினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குழந்தை பெற்றுக்கொண்டால் ரூ. 62 லட்சம் போனஸ்; ஊழியர்களைத் திக்குமுக்காட வைத்த நிறுவனம்!

Published on 13/02/2024 | Edited on 13/02/2024
Rs.62 lakh bonus for having a child in private company at south korea

கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ளது தென் கொரியா. சிறிய அளவில் பரப்பளவு கொண்ட இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகையே 5 கோடி. இந்த நாட்டின் அண்டை நாடான வடகொரியா அவ்வப்போது ஏவுகணைகளை வீசி அச்சுறுத்தி வருகிறது. ஒரு பக்கம் இப்படியொரு பிரச்சனை என்றால், மறுபக்கம் தென்கொரியா எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனை, முன்னெப்போதும் இல்லாத அளவு பிறப்பு விகிதம் சரிந்து இருப்பதே ஆகும். 

கடந்த ஆண்டு தென் கொரியாவின் தேசிய புள்ளியியல் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், ‘2022 ஆம் ஆண்டு சுமார் 1,91,700 திருமணங்கள் நடந்தன. இது முந்தைய ஆண்டை விட 0.4 சதவீதம் குறைவு ஆகும்’ என்று தெரிவித்திருந்தது.

திருமணங்கள் குறைந்து கொண்டே வருவதால் குழந்தைகள் பிறப்பு விகிதமும் குறைந்து வருவதாக அந்த நாடு வருத்தம் கொள்கிறது. வேலைப் பளு உள்ளிட்ட பல காரணங்களால் தென் கொரிய இளம் தலைமுறையினர், குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் ஆர்வம் குறைந்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால், பெண்கள் அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்கும் விதமாகப் பல்வேறு விழிப்புணர்வுகளையும் தென்கொரியா அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், தென் கொரியாவைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் தங்கள் ஊழியர்கள் அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக ஒரு புதிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. அந்த நிறுவனம் கூறியிருப்பதாவது, ‘குழந்தை பிறப்பை ஊக்குவிக்கும் விதமாகத் தங்கள் நிறுவன ஊழியர்கள் குழந்தைகள் பெற்றுக்கொண்டால் அவர்களுக்கு ரூ. 62.3 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும். ஒவ்வொரு குழந்தைக்கும் இது கொடுக்கப்படும். ஆண், பெண் என இருவருக்குமே இந்த சலுகை கிடைக்கும். நமது நிறுவனத்தின் இந்த முயற்சி குழந்தைகள் பிறப்பு விகிதத்தை உயர்த்தி, நாட்டின் எதிர்கால பிரச்சனைக்குத் தீர்வு காணும் விதமாக அமையும்’ என்று கூறியுள்ளது. 

பல விசித்திரமான சட்டங்களைக் கொண்டு வரும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வடகொரியா பெண்கள் அதிக குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது. 

Next Story

“தென்கொரியாவை தூண்டும் நாடுகளை அழித்துவிடுவோம்” - வடகொரியா பகிரங்க எச்சரிக்கை

Published on 11/01/2024 | Edited on 11/01/2024
North Korea's warning on We will destroy countries that provoke South Korea

அவ்வப்போது சர்ச்சையில் சிக்கும் நாடுகளுக்கு மத்தியில் எப்போதும் சர்ச்சைக்குள்ளேயே சிக்கியிருக்கும் நாடு வடகொரியா. அதேபோல சர்ச்சையில் சிக்கிக் கொள்பவர் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன்.  ஐ.நா உள்ளிட்ட உலகின் எந்த அமைப்புக்கும் கட்டுப்படாமல் செயல்பட்டு வரும் கிம் ஜாங் உன், அண்டை நாடுகளான ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளை மிரட்டும் வகையில் அவ்வப்போது ஏவுகணைகளை ஏவி பயமுறுத்தி வருகிறார். அதோடு மட்டுமல்லாமல், அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி அடிக்கடி பல்வேறு ஏவுகணை சோதனைகளை அவர் நிகழ்த்தி வருகிறார்.

இதற்கிடையே, வடகொரியா - தென்கொரியா இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இதன் காரணமாக, சில தினங்களுக்கு முன் தென்கொரியாவை அச்சுறுத்தும் வகையில் வடகொரியா திடீரென பீரங்கி தாக்குதல் நடத்தியது. வடகொரியா வீசிய 200க்கும் மேற்பட்ட பீரங்கி குண்டுகள் யோன்பியோங் தீவுக்கு அருகே இருநாட்டிற்கும் இடையேயான பாதுகாக்கப்பட்ட மண்டலமான கடல் பகுதியில் விழுந்தன. இதனால், இருநாடுகளுக்கும் இடையே பதற்றம் நீடித்து வருகிறது. 

இந்த நிலையில், தென்கொரியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகள் செயல்பட்டு வருகின்றன. இதேபோல், உக்ரைன் மீதான தாக்குதலில் உக்ரைனுக்கு அமெரிக்கா உதவிக்கரம் நீட்டியுள்ளது. மேலும், அமெரிக்கா - தென் கொரியா நாடுகளின் கூட்டு ராணுவ பயிற்சி, தென்கொரியாவில் அமெரிக்காவின் குண்டு வீசும் விமானங்கள், அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல்கள் போன்ற சக்தி வாய்ந்த ராணுவத் தளவாடங்களை அமெரிக்கா நிறுத்தி வைத்திருக்கிறது. இதனால், வடகொரியா அதிபர், தென்கொரியாவுக்கு ஆதரவு அளிக்கும் நாடுகளுக்குப் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து, வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன், “தென்கொரியா எங்கள் முக்கியமான எதிரி. தென்கொரியாவை தூண்டும் நாடுகளை அழித்துவிடுவோம்” என்று பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.