1935 ஆம் ஆண்டு இந்த பூமியிலிருந்து அழிந்துப்போன தைலாசின் இன புலியின் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
40 லட்சம் ஆண்டுகள் பூமியில் வாழ்ந்த இந்த புலி இனம், கடைசியாக கடந்த 1935 ஆம் ஆண்டோடு அழிந்துபோனது. நாய் போன்ற தோற்றமுடைய இந்த புலிகள் வேட்டையாடி உண்ணக்கூடியவை ஆகும். டாஸ்மானியா பகுதியில் அதிகம் காணப்பட்ட இந்த புலி இனம், வனங்கள் சூறையாடப்பட்டதாலும், காலநிலை மாற்றங்களாலும் அழிந்துபோனது. இந்நிலையில், 1935 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட தைலாசின் புலியின் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. 21 விநாடிகள் ஓடக்கூடிய கறுப்பு, வெள்ளையிலான அந்தப் பதிவு 1935 ஆம் ஆண்டில் 'டாஸ்மேனியா தி ஒண்டர்லேண்ட்' என்ற பயணக் குறிப்பிற்காகப் படமாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெஞ்சமின் என்பவர் எடுத்த வீடியோ ஆஸ்திரேலியாவிலுள்ள தேசியத் திரைப்பட மற்றும் ஒலி காப்பகத்தில் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது. இந்த வீடியோவை தற்போது அந்த காப்பக உரிமையாளர்கள் வெளியிட்டுள்ளனர். டாஸ்மேனியாவில் உள்ள ஹோபார்ட் பெளமாரிஸ் மிருகக்காட்சி சாலையில் எடுக்கப்பட்ட இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.