உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) வளர்ச்சி அபரிமிதமாக இருக்கிறது. பெரும்பாலான துறைகளில் தற்போது செயற்கை நுண்ணறிவு தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இது நமது வேலைகளைச் சுலபமாகவும் திறம்படவும் செய்து முடிக்கிறது.
கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்காவைச் சேர்ந்த ‘ஓபன் ஏ.ஐ’ என்ற நிறுவனம் ‘சாட் ஜிபிடி’ என்ற செயற்கை நுண்ணறிவு, பொது மக்கள் பயன்படுத்தும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த செயற்கை நுண்ணறிவு வரவால், தகவல் தொழில்நுட்ப உலகில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டன. குறிப்பாக, மனிதர்கள் தொழில்நுட்பத்தில் செய்யக்கூடிய வேலைகளை, செயற்கை நுண்ணறிவின் மூலம் மிகவும் எளிதாக செய்ய முடியும். மேலும், இது கவிதைகள், கட்டுரைகள் மற்றும் கதைகள் எழுதும் திறன் படைத்தது என்பதுடன் மனிதனை போன்று கணினி குறியீடுகளையும் இதனால் எழுத முடியும்.
அதே வேளையில், இந்த செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி, நகைச்சுவை கேளிக்கைக்காக அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் ஆகியோர்களை கிண்டல் செய்யும் வகையில் மீம்ஸ்கள், போட்டோக்கள், வீடியோக்கள் போன்றவற்றை இணையவாசிகள் சமூக வலை தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் கணினி உள்ளிட்ட இயந்திரங்களுக்கு மனிதர்களைப் போன்ற சிந்தனைகளைக் கொடுக்க விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர்.
இதனிடையே, மேக்புக், ஐபோன், ஐபாட் உள்ளிட்ட சாதனங்களில் ‘ஓபன் ஏ.ஐ’ டூல்களை இனி பயன்படுத்தலாம் என ஆப்பிள் சி.இ.ஓ தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அதனை கண்டித்து ரீட்வீட் செய்த டெஸ்லா கார் நிறுவனம் மற்றும் ஸ்பேஸ் - எக்ஸ் விண்வெளி ஆய்வு மைய நிறுவனருமான எலான் மஸ்க், ஐபோன், ஆப்பிள், டேட்டா ஆகியவற்றை மையமாக வைத்து உருவாக்கிய மீம்ஸ் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
கடந்த 2017ஆம் ஆண்டு முஜிபூர் ரஹ்மான் இயக்கத்தில் துரை சுதாகர் மற்றும் டோனா ரொசாலியோ ஆகியோர் இணைந்து நடித்த திரைப்படம் ‘தப்பாட்டம்’. இந்த படத்தின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பல முறை மீம்ஸ்களாக பரவியிருக்கிறது. தற்போது உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், தப்பாட்டம் படத்தின் புகைப்படத்தின் பகிர்ந்ததால் இது உலகம் முழுவதும் வைரலாகியுள்ளது.