தமிழர்களுக்குச் சொந்தமான மயானத்தில் தீவிரவாதியின் உடலை புதைத்த இலங்கை அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியிருக்கிறார் இலங்கையிலுள்ள தமிழ் அமைச்சர் செந்தில்தொண்டமான். அரசின் நடவடிக்கைக்கு அமைச்சர் ஒருவரே எதிர்ப்பு தெரிவித்திருக்கும் விவகாரம் இலங்கை அரசியலில் ஏகத்துக்கும் பரபரப்பை உருவாக்கி வருகிறது.

Advertisment

இலங்கை மட்டக்களப்பில் உள்ள சீயோன் தேவாலயத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 21-ந்தேதி நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் பலரும் கொல்லப்பட்டனர். இந்த மனித வெடிகுண்டு தாக்குதலுக்குக் காரணமானவன் தீவிரவாதி முகமத்அசாத். அவனது உடல் பாகங்கள் தேவாலயத்தில் சிதறிக் கிடந்தது.

srilanka

இந்த தாக்குதலை புலனாய்வு செய்த இலங்கையின் புலனாய்வு அமைப்புகள், தீவிரவாதி முகமத் அசாத்தின் சிதறிய உடல் பாகங்களை சேகரித்து பாதுகாத்து வந்தன. விசாரணை முடிந்த நிலையில் முகமத் அசாத்தின் உடல் பாகங்களை எங்கே புதைப்பது என இலங்கை பாதுகாப்புத்துறை போலீஸார் ஆலோசித்தபோது, மட்டக்களப்பில் முஸ்லீம்களுக்கான கல்லறை பகுதியில் புதைத்து விடுங்கள் என இலங்கை அரசு தரப்பில் சொல்லப்பட்டது.

Advertisment

அதற்கான முயற்சியில் பாதுகாப்புத்துறை இறங்கிய போது, முகமதுஅசாத் முஸ்லீமாக இருந்தாலும் அவன் ஒரு தீவிரவாதி. அவனது உடலை புனிதமான எங்கள் கல்லறையில் புதைக்க அனுமதிக்க மாட்டோம் என முஸ்லீம் மக்களும் முஸ்லீம் அமைப்பினரும் கடும் எதிர்ப்பைக் காட்டினர். இதனால் அந்த முயற்சியை கைவிட்ட இலங்கை பாதுகாப்புத்துறையினர், அவசரம் அவசரமாக மட்டக்களப்பு, கள்ளியங்காடு தமிழர்களுக்குச் சொந்தமான இந்து மயானத்தில் தீவிரவாதியின் உடல்பாகங்களை புதைத்தனர்.

இதனையறிந்து மட்டக்களப்பு தமிழர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த நிலையில் இலங்கை அரசை கடுமையாக கண்டித்திருக்கிறார் ஊவா மாகாண தமிழ் அமைச்சர் செந்தில் தொண்டமான். இது குறித்து பேசிய அவர், ‘’ இந்து மயானத்தில் தீவிரவாதியின் உடலை புதைத்ததால் சில நாட்களாகவே மட்டக்களப்பில் பதட்டமான சூழல் இருந்து வருகிறது. பாதுகாப்புத்துறையினரால் முன்னெடுக்கப்பட்டுள்ள தாந்தோன்றித்தனமான இந்த செயல்பாடுகளால், வீதியில் இறங்கி போராடும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். முகமது அசாத் என்பவன், மனித படுகொலைகளுக்குக் காரணமான பயங்கரவாதி. அவனை அவனது குடும்பத்தினரும் ஒட்டுமொத்த முஸ்லீம்களும் புறக்கணித்து விட்டனர்.

நினைத்துப் பார்த்தாலே குலை நடுங்கும் தேவாலய குண்டு வெடிப்பில் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை கொல்லப்பட்டிருக்கிறார்கள். அதற்கு காரணமான ஒரு தீவிரவாதியின் உடல் பாகங்களை அவனது சொந்த ஊரான காத்தான்குடி முஸ்லீம் மையவாடிகளில் புதைப்பதற்கே அனுமதி வழங்க முஸ்லீம்கள் மறுத்து விட்டனர். அது மட்டுமல்லாமல், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள எந்தவொரு முஸ்லீம் மையவாடிகளிலும் இடமளிக்கப்படவில்லை.

Advertisment

இப்படிப்பட்ட நிலையில், முஸ்லீம் மக்களால் புறக்கணிக்கப்பட்ட தீவிரவாதியின் உடல் பாகங்களை இந்து மயானத்தில் இலங்கை காவல்துறையினரும் பாதுகாப்புத்துறை அதிகாரிகளும் இணைந்து புதைத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. பாதுகாப்புத்துறையினரின் தான்தோன்றித்தனமான இத்தகைய செயல்கள், தமிழர்களுக்கும் முஸ்லீம்களுக்குமிடையே இனக்குரோதத்தை தூண்டிவிடுவதற்கு வழிகோல்வதாக இருக்கிறது. இதனை, நான் சார்ந்துள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது. இன நல்லிணக்கத்தை உருவாக்கவும் அதனை பாதுகாக்கவும் துணை நிற்க வேண்டிய இலங்கை பாதுகாப்புத்துறை, இன நல்லிணக்கத்தை சீர்குலைக்க முற்படுவது அறிவீனச் செயலாகும்.

Senthil Thondaiman

தமிழர்களின் பாரம்பரிய வழிமுறைகளை மாற்றி இந்து மயானத்தில் ஒரு தீவிரவாதியின் உடலை அடக்கம் செய்திருப்பது தமிழர்களின் பாரம்பரியத்தையும் நெறிகளையும் கொச்சைப்படுத்துவதாக இருக்கிறது. தமிழர்களின் பாரம்பரிய வழிமுறைகளை இலங்கை அரசு அழிக்க நினைப்பதை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆறுமுக தொண்டமான் உள்பட கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் பொறுத்துக்கொள்ளமாட்டார்கள். உடனடியாக புதைக்கப்பட்ட தீவிரவாதியின் உடல் பாகங்களை இந்து மயானத்திலுருந்து அப்புறப்படுத்த இலங்கை அரசை வலியுறுத்துகிறேன் ‘’ என்கிறார் ஆவேசமாக.

இலங்கை அரசுக்கு எதிராக இலங்கையிலுள்ள ஒரு தமிழ் அமைச்சரே போர்க்கொடி உயர்த்துவது இலங்கை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தீவிரவாதியின் உடல் பாகங்கள் அப்புறப்படுத்தப்படாவிட்டால் தமிழர்களை திரட்டி பாதுகாப்புத்துறைக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளதாக மட்டக்களப்பிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.