Skip to main content

"பின்விளைவுகள் ஏற்படும்" - அமெரிக்காவிற்கு தலிபான்கள் எச்சரிக்கை!

Published on 24/08/2021 | Edited on 24/08/2021

 

JOE BIDEN - taliban

 

ஆப்கானிஸ்தான் நாட்டைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள், அந்த நாட்டில் ஆட்சியமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தலிபான்கள் ஆப்கனைக் கைப்பற்றியுள்ளதையடுத்து, அங்குள்ள தங்கள் குடிமக்களை அழைத்து வர பல்வேறு நாடுகள் தொடர் நடவடிக்கை எடுத்துவருகின்றன.

 

தலிபான்களுடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தின்படி, வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் அமெரிக்கா தனது படைகளைத் திரும்பப் பெற வேண்டும். இதனால் தற்போது இராணுவம் மூலம் மீட்புப் பணிகளை நடத்திவரும் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும், ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் மீட்புப் பணிகளை முடித்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

 

இந்தச் சூழலில் ஆப்கன் விவகாரம் குறித்து பேசிய ஜோ பைடன், மீட்புப் பணிகளுக்கான கால அளவை நீட்டிக்க ஆலோசனை நடத்திவருவதாக தெரிவித்தார். இந்தநிலையில், மீட்புப் பணிகளுக்கான கால அளவை நீட்டித்தால் பின்விளைவுகள் ஏற்படும் என தலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

இதுதொடர்பாக ஊடகம் ஒன்றிற்குப் பேட்டியளித்த தலிபான்களின் செய்தித்தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன், "ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் மீட்புப் பணிகளை முடிக்காவிட்டால், அவர்கள் ஆக்கிரமிப்பை நீட்டிப்பதாக அர்த்தம். அமெரிக்காவோ, இங்கிலாந்தோ மீட்புப் பணிகளுக்குக் கூடுதல் அவகாசம் கேட்டால், அவர்களுக்கான பதில் முடியாது என்பதுதான். மீட்புப் பணிகளை நீட்டித்தால் பின்விளைவுகள் ஏற்படும். அவர்கள் ஆக்கிரமிப்பை தொடர விரும்பினால் அது எதிர்வினையை ஏற்படுத்தும்" என தெரிவித்துள்ளார்.

 

இதற்கிடையே ஆப்கன் விவகாரம் குறித்து விவாதிக்க ஜி-7 நாடுகள் இன்று (24.08.2021) கூடுகின்றன. இந்தக் கூட்டத்தில் தலிபான்களுக்குப் பொருளாதாரத் தடை விதிப்பது குறித்து பேசப்படலாம் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடியுரிமை திருத்தச் சட்டம்; இந்திய அரசுக்கு தாலிபான் அறிவுறுத்தல்!

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
Afghanistan has advised that the CAA should be implemented on a non-religious basis

பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசால் கடந்த 2019 ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டம் (C.A.A.) கொண்டுவரப்பட்டது. அதில் கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்னர் இந்தியா வந்தடைந்த வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர் அல்லாதோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு புதிய சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தது. இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. பெரிய அளவில் போராட்டங்களும் நடைபெற்றன.

அதாவது இந்த சட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க சி.ஏ.ஏ. வகை செய்கிறது. அதே சமயம் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறும் இஸ்லாமிய மக்களுக்கு குடியுரிமை வழங்க வழிவகை செய்யப்படவில்லை. மேலும் தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கவும் சிஏஏ சட்டத்தில் வழிவகை செய்யப்படாததும் குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் இந்த சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கி இருந்தார். இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம் கடந்த 11 ஆம் தேதி அமலுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டது.

மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு, பல்வேறு எதிர்க்கட்சிகள், தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. அந்த வகையில், கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயனும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் தங்கள் மாநிலத்தில் சி.ஏ.ஏ சட்டம் அமல்படுத்தப்பட மாட்டாது என்று கூறி மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். இதற்கிடையில், சி.ஏ.ஏ சட்டத்தை ரத்து செய்வதில் சாத்தியம் இல்லை எனவும், அந்த சட்டத்தை நிறுத்தும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு இல்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக கூறியிருந்தார்.  

இந்த நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்தை மதவேறுபாடு இன்றி அமல்படுத்தவேண்டும் என தாலிபான் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக  தாலிபான் அரசின்(ஆப்கானிஸ்தான் அரசு) அரசியல் தலைமை அலுவலக தலைவர் சுகைல் ஷாகீன், “இந்தியாவில் சிறுபான்மையினராக உள்ள முஸ்லிம்கள் சம உரிமையுடன் நடத்தப்பட வேண்டும் என்று விரும்புகிறோம். இந்தியாவில் புதிதாக அமல் செய்யப்பட்டிருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத வேறுபாடு இன்றி அமல்படுத்த வேண்டும். அந்த சட்டத்தில் முஸ்லிம்களையும் சேர்க்க வேண்டும். ஆப்கானிஸ்தானில் சீக்கியர்கள், இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் சுதந்திரமாக, பாதுகாப்பாக உள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.

Next Story

முக்கிய தலைவரைக் கொன்ற புதின்? நெருக்கடியில் ரஷ்யா!

Published on 17/02/2024 | Edited on 17/02/2024
US President Joe Biden said that Putin responsible for Navalny passed away

ரஷ்யாவில் அதிபர் புதின் அரசின் மீது எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்து வந்தார். 47 வயதாகும் அலெக்ஸி நவல்னி எதிர்கால ரஷ்யா என்ற புதிய கட்சியை தொடங்கி புதினைத் தொடர்ந்து விமர்சனம் செய்தும், ரஷ்ய மாகாணங்களில் நடைபெறும் ஊழல் குறித்தும் தன்னுடைய இணையப் பக்கத்தில் எழுதி வந்தார். இதனால் ரஷ்ய மக்களிடையே பிரபலமானார். கடந்த அதிபர் தேர்தலில் புதினுக்கு எதிராக அலெக்ஸி நவல்னி போட்டியிட முடிவு செய்திருந்தார். ஆனால் புதின் அரசு அவர் மீது ஊழல் குற்றச்சாட்டை சுமத்தி தேர்தலில் போட்டியிட முடியாமல் செய்தது. இருப்பினும் தேர்தலின் போது புதினுக்கு எதிராக பிரச்சாரம் செய்தார். 

இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாஸ்கோவுக்கு விமானத்தில் செல்லும் போது அலெக்ஸி நவல்னி மயங்கி விழுந்தார். இதையடுத்து அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் அலெக்ஸி நவல்னிக்கு விஷம் வைக்கப்பட்டிருந்ததை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். இதனை ஜெர்மனி அரசு உறுதி செய்ததோடு, விஷம் வைக்கப்பட்டதில் ரஷ்ய அரசுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் தங்களுக்கு கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை முற்றிலுமாக ரஷ்ய அரசு மறுத்தது. 

இதனைத் தொடர்ந்து 5 மாத சிகிச்சைக்குப் பிறகு ரஷ்யா திரும்பிய அலெக்ஸி நவல்னி, அறக்கட்டளை மூலமாக பணத்தை கையாடல் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதாகக் கூறி கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அலெக்ஸி நவல்னிக்கு 9 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு பயங்கரவாத அமைப்புகளை உருவாக்கி அவற்றிற்கு நிதியுதவி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் கடந்த ஆண்டு மேலும் 19 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் ரஷ்யாவில் உள்ள ஆர்க்டி சிறையில் அடைக்கப்பட்டிருந்த அலெக்ஸி நவல்னி உயிரிழந்துள்ளார். சமீப காலமாக உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த அவர் நடைபயிற்சி மேற்கொண்ட போது மயங்கி விழுந்து சிறையிலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது வரை அவரது இறப்பிற்கான காரணம் வெளியிடப்படவில்லை. அலெக்ஸி நவல்னியின் மனைவி, புதின் தான் தனது கணவர் இறப்பிற்கு பொறுப்பேற்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து ரஷ்யாவில் அலெக்ஸி நவல்னியின் மரணத்திற்கு நீதிகேட்டு பலரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, “ரஷ்ய அதிபர் புதின் திட்டமிட்டு கொலை செய்துவிட்டார். இது ரஷ்ய அரசின் எதேச்சதிகாரப் போக்கு” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

US President Joe Biden said that Putin responsible for Navalny passed away

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், “அலெக்ஸி நவல்னியின் மரணம் குறித்து நான் உண்மையில் ஆச்சரியம் அடையவில்லை. புதின் அரசாங்கம் செய்யும் ஊழல் மற்றும் அனைத்து மோசமான செயல்களையும் அவர் தைரியமாக எதிர்த்தார். பதிலுக்கு, புதின் அவருக்கு விஷம் கொடுத்தார், அவரைக் கைது செய்தார். புதினால் இட்டுக்கட்டப்பட்ட குற்றங்களுக்காக நவல்னியின் மீது வழக்கு தொடர்ந்தார். தனிமைப்படுத்தப்பட்ட அவரைச் சிறையில் அடைத்தார்.  அலெக்ஸி நவல்னியின் மரணத்திற்கு புதின் தான் பொறுப்பு” என தெரிவித்துள்ளார். அலெக்ஸியின் மரணம் தற்போது புதினின் ரஷ்ய அரசாங்கத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.