Skip to main content

ஆப்கனில் அரசுப் பணியாளர்களுக்கு ஆபத்து - ஐ.நாவுக்கான உளவு அறிக்கையில் அதிர்ச்சி தகவல்!

Published on 20/08/2021 | Edited on 20/08/2021

 

taliban

 

ஆப்கானிஸ்தான் நாட்டைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள், அந்த நாட்டில் ஆட்சியமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே தலிபான்கள், அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் பொது மன்னிப்பு வழங்குவதாக அறிவித்தனர்.

 

மேலும், அண்மையில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில், தாங்கள் யாரையும் பழி வாங்க மாட்டோம் எனவும் தெரிவித்திருந்தனர். ஆனால், உலகளாவிய பகுப்பாய்வுகளுக்கான ரிப்டோ நார்வேஜியன் மையம், ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்பிய அறிக்கையின் மூலம், முக்கிய அரசு பொறுப்புகளில் இருந்தவர்களைத் தலிபான்கள் தீவிரமாக வேட்டையாடிவருவது தெரியவந்துள்ளது.

 

உலகளாவிய பகுப்பாய்வுகளுக்கான ரிப்டோ நார்வேஜியன் மையத்தின் அறிக்கையில், முன்பிருந்த ஆப்கன் அரசில் பணியாற்றியவர்களையும், அந்த அரசுடன் இணைந்து செயலாற்றியவர்களையும் வேட்டையாடுவதைத் தலிபான்கள் தீவிரப்படுத்தியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. ஒருவேளை அந்த நபர்கள் கிடைக்கவில்லையென்றால், அவர்களது குடும்பத்தினரை  தலிபான்கள், ஷரியா சட்டப்படி தண்டித்துவருவதாக அந்த அறிக்கை கூறுகிறது.

 

குறிப்பாக இராணுவம், காவல்துறை, உளவு நிறுவனம் ஆகியவற்றில் பணியாற்றிய அதிகாரிகள் ஆபத்தில் இருப்பதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. உலகளாவிய பகுப்பாய்வுகளுக்கான ரிப்டோ நார்வேஜியன் மையம் என்பது ஐக்கிய நாடுகள் சபைக்காக உளவு அறிக்கைகளைத் தயார் செய்யும் தனியார் அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடியுரிமை திருத்தச் சட்டம்; இந்திய அரசுக்கு தாலிபான் அறிவுறுத்தல்!

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
Afghanistan has advised that the CAA should be implemented on a non-religious basis

பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசால் கடந்த 2019 ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டம் (C.A.A.) கொண்டுவரப்பட்டது. அதில் கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்னர் இந்தியா வந்தடைந்த வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர் அல்லாதோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு புதிய சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தது. இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. பெரிய அளவில் போராட்டங்களும் நடைபெற்றன.

அதாவது இந்த சட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க சி.ஏ.ஏ. வகை செய்கிறது. அதே சமயம் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறும் இஸ்லாமிய மக்களுக்கு குடியுரிமை வழங்க வழிவகை செய்யப்படவில்லை. மேலும் தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கவும் சிஏஏ சட்டத்தில் வழிவகை செய்யப்படாததும் குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் இந்த சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கி இருந்தார். இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம் கடந்த 11 ஆம் தேதி அமலுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டது.

மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு, பல்வேறு எதிர்க்கட்சிகள், தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. அந்த வகையில், கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயனும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் தங்கள் மாநிலத்தில் சி.ஏ.ஏ சட்டம் அமல்படுத்தப்பட மாட்டாது என்று கூறி மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். இதற்கிடையில், சி.ஏ.ஏ சட்டத்தை ரத்து செய்வதில் சாத்தியம் இல்லை எனவும், அந்த சட்டத்தை நிறுத்தும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு இல்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக கூறியிருந்தார்.  

இந்த நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்தை மதவேறுபாடு இன்றி அமல்படுத்தவேண்டும் என தாலிபான் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக  தாலிபான் அரசின்(ஆப்கானிஸ்தான் அரசு) அரசியல் தலைமை அலுவலக தலைவர் சுகைல் ஷாகீன், “இந்தியாவில் சிறுபான்மையினராக உள்ள முஸ்லிம்கள் சம உரிமையுடன் நடத்தப்பட வேண்டும் என்று விரும்புகிறோம். இந்தியாவில் புதிதாக அமல் செய்யப்பட்டிருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத வேறுபாடு இன்றி அமல்படுத்த வேண்டும். அந்த சட்டத்தில் முஸ்லிம்களையும் சேர்க்க வேண்டும். ஆப்கானிஸ்தானில் சீக்கியர்கள், இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் சுதந்திரமாக, பாதுகாப்பாக உள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.

Next Story

வங்காள தேச பொதுத் தேர்தல்; ஐ.நா, அமெரிக்கா குற்றச்சாட்டு

Published on 10/01/2024 | Edited on 10/01/2024
UN, US accused on Bangladesh General Election

வங்காள தேசத்தில், பங்களாதேஷ் அவாமி லீக் கட்சி சார்பில் ஷேக் ஹசீனா 15 வருடங்களாகப் பிரதமராகப் பொறுப்பு வகித்து வருகிறார். பிரதமர் ஷேக் ஹசீனா மீது ஊழல் மற்றும் மனித உரிமை மீறல் போன்ற குற்றச்சாட்டுகள் அவ்வப்போது எழுந்து வந்தன. அதனால், வங்கதேச தேசியக் கழகம் மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமி ஆகிய இரு பிரதான எதிர்க்கட்சிகள், பிரதமர் உடனடியாக பதவி விலகவும், ஆளும் ஆட்சி கலைக்கப்பட்டுத் தேர்தல் முடியும் வரை கட்சி சார்பற்ற அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தன. 

இதையடுத்து, முக்கிய எதிர்க்கட்சியான வங்கதேச தேசியக் கழகம் நாடு தழுவிய போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. மேலும், இந்தத் தேர்தலை புறக்கணிப்பதாகவும் அக்கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான கலீதா ஜியா அறிவித்தார். இதனால் சட்டம், ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாகக் கருதி கலீதா வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தி வந்தனர். 

இந்த நிலையில், அந்நாட்டில் பாராளுமன்றத் தேர்தல் கடந்த 7 ஆம் தேதி விறுவிறுப்பாக நடைபெற்றது. எதிர்க்கட்சிகள் தேர்தலைப் புறக்கணித்த நிலையில், பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்றது. 350 தொகுதிகள் கொண்ட வங்காள தேசத்தில் 50 தொகுதிகளுக்கு அரசாங்கத்தால் பெண் எம்.பி.க்கள் நியமிக்கப்படுவர். எனவே, 300 தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெறும். ஆனால், ஒரு வேட்பாளர் இறந்ததால் மீதமுள்ள 299 தொகுதிகளுக்கு மட்டும் நேற்று முன்தினம் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 41.8 சதவீதம் வாக்குகள் பதிவாகின. 

தேர்தல் முடிந்ததும் உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டு, எண்ணிக்கை முடிவுகள் நேற்று முன்தினம் (08-01-24) வெளியிடப்பட்டன. அதன்படி, தேர்தல் நடைபெற்ற 299 தொகுதிகளில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி 223 இடங்களில் கைப்பற்றி அபார வெற்றி பெற்றது. முக்கிய எதிர்க்கட்சியான ஜாதியா கட்சி 11 இடங்களை மட்டுமே கைப்பற்றி இருந்தது.

இதன் மூலம், ஷேக் ஹசீனா ஐந்தாவது முறையாக வங்காள தேச நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்க இருக்கிறார். கோபால் கஞ்ச் தொகுதியில் போட்டியிட்ட ஷேக் ஹசீனா, 8வது முறையாக எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம், இந்த குறைந்தபட்ச வாக்குப்பதிவே தங்களது தேர்தல் புறக்கணிப்புக்கு கிடைத்த வெற்றியாகும். எனவே, நியாயமற்ற முறையில் நடந்த இந்த தேர்தலை ரத்து செய்யக்கோரி எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தி வருகின்றன. 

இந்த நிலையில், வங்காள தேசத்தில் நடந்த பொதுத் தேர்தல் சுதந்திரமாக, நியாயமாக நடைபெறவில்லை. அனைத்து கட்சிகளும் பங்கு பெறாதது வருத்தமளிக்கிறது என்று அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. அதுமட்டுமல்லாமல், இந்த தேர்தல் குறித்து ஐ.நா மனித உரிமைகள் தலைவர் வோல்கர் டர்க், “புதிய அரசு ஜனநாயகம், மனித உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தலுக்கு முன்பு கடந்த ஆண்டு அக்டோபர் முதல் எதிர்க்கட்சி வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் என 25,000க்கு மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது வன்முறை கட்டவிழ்க்கப்பட்டு 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர். வன்முறையால் தேர்தல் சிதைக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து,  “வங்கதேசத்தில் நடந்த 12வது பொதுத் தேர்தல் நம்பகமான, நியாயமான முறையில் நடைபெறவில்லை. அனைத்து கட்சிகளும் போட்டியிடாததால், மக்களுக்கு வேறு கட்சிகளுக்கு வாக்களிக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை” என்று இங்கிலாந்து குற்றம்சாட்டியுள்ளது.